Thursday, April 6, 2017

சுவாமி. விபுலானந்தர் - 17.3.1892 - 5.6.1947

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

என்ற மானுட உளச் செழுமையைப் பிரதி பலிக்கும் பாடலின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் நன்கறியப்பட்ட விபுலானந்தர் ஈழத்தின் மட்டக்களப்பு தந்த அபூர்வ மாணிக்கங்களில் ஒன்று.

காரைதீவில் 27.03.1892 அன்று பிறந்து கல்வித்தகுதிகள் பல பெற்றபின் இராமகிருஷ்ன மடத்தைச் சார்ந்து விபுலாநந்தர் என்ற துறவுப் பெயரினைப் பின்னாளில் பெற்ற மயில்வாகனன் வாழ்ந்த்து வெறும் 55 ஆண்டுகளே என்ற போதும் அவர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞராக வாழ்ந்திருந்தார்.

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, சிதம்பரம் அண்னாமலைப்பல்கலைக்கழகம், மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்தவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் வட/ தென் இந்தியாவில் குறிப்பாக ஐரோப்பிய இந்திய நாகரிக வேறுபாடு, இந்தியர் வெள்ளையர்/ ஆரியர் திராவிடர் /புதிய, பழைய இலக்கியம் / இந்து கிறீஸ்தவம் / முஸ்லீம் இந்து / உயர்ந்தவன் தாழ்ந்தவன் / சமய சார்பு சார்பின்மை/ துறவு உலக வாழ்வு என பல்வேறுபட்ட முரண்பட்ட சிந்தனைகள் கிளர்ச்சியடைந்திருந்த சமூக பண்பாட்டுச் சூழல் காணப்பட அதே நேரம் இலங்கையில் வகுப்பு வாத உணர்வுகள் தலைதூக்கி இலங்கை அரசியலில் சேர்.பொன். இராமநாதன், சேர். பொன்.அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் உதயமாகி இருந்தனர். இலங்கையில் தமிழர் சிங்களவர் பிரச்சினை அடையாளம் காணப்படத் தக்க அளவுக்கு வெளிப்பட ஆரம்பித்திருந்தது.

இத்தகைய ஒரு சமூகப் பின்னணியில் மரபு வழித் தமிழ்க்கல்வி, ஆங்கிலக் கல்வி,  விஞ்ஞான கணித அறிவு, வடமொழி அறிவு, இராமகிருஷ்ண மடத்தொடர்பு, ஆகியவற்றோடு , கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்த பன்மொழிப்புலமை கொண்டவராக விபுலானந்தர் விளங்கினார். பன்மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினையும் பரந்துபட்ட உலகப் பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது. அறிஞராக துறவியாக கலைஞராக என ஓர் அபூர்வ கலவையாக அவர் இருந்தார். அதனால் விஞ்ஞானத்தையும் தமிழையும் கணிதத்தையும் இணைக்க முடிந்தது. கலைச் சொல்லாக்கப் பேரவை மூலம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்த முடிந்தது. முத்தமிழையும் இணைத்து திறனாய்வு செய்ய முடிந்தது. எதிர்காலச் சமுதாயப் பார்வையோடு பாரதியாரையும் அவரின் பாடல்களையும் பிரபலப்படுத்த முடிந்தது. சேரிப்புறங்களில் பள்ளிகளை ஏற்படுத்த முடிந்தது.

தமிழிசை பற்றிய ஆராய்ச்சிகளும், நாடக மரபு  பற்றிய அவரது தமிழ், சமஸ்கிருத, ஆங்கில மரபு ஒப்புவமைகளும்,  உலகக் கலை இலக்கியங்களைத் தமிழுக்கும்  தமிழருக்கும் அறிமுகம் செய்ததும்,  தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய / அடையாளங்களை / அடையவேண்டிய வளர்ச்சியை உலக இலக்கிய தரத்தில்  ஒப்பு நோக்கி தர நிர்னயம் செய்ததும், அவர் எழுதிய பல சமய ஞான நூல்களும் அவருடய ஆழுமைப் பண்பு நலனையும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும்  பறைசாற்றுவன. அவருடய பங்களிப்புகள் யாவும் சமூகத்தை நிதானப்படுத்துவனவாக இருந்தன.

1929இல் வெளிவந்த ’மதங்க சூளாமணி’ என்ற அவரது நாடக இயல் பற்றிய நூல் தமிழரின் நாடகக் கலையை தமிழுக்கு கண்டெடுத்துக் கொடுத்த அரிய நூலாகும். அதில் தமிழ் விஞ்ஞான கணித ஆய்வுப்புலமையோடு அதனை சேக்‌ஷ்பியரின் நாடக இயலோடும் வடமொழி நாடக அம்சங்களோடும் ஒப்பிட்டு சகலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தமிழருக்கான நாடக மரபை தமிழுக்குக் கண்டெடுத்துக் கொடுத்திருந்தார் அவர். நாடக இயலைப் பயில்வோருக்கு இன்றும் அது ஒரு அத்திவாரப் பாடமாகும்.

இருந்த போதும் அவரது ‘யாழ் நூல்’ என்ற நூல் தமிழுக்கு அவர் அளித்து பெரும் பொக்கிஷமாகும். அது தமிழர் மத்தியில் இருந்து மறைந்து அழிந்து போயிருந்த யாழ் என்ற இசைக்கருவியை தமிழருக்கு மீண்டும் மீட்டெடுத்துக் கொடுத்த அரிய பெரும் ஆராய்ச்சி நூலாகும்.

” சரித்திர கால எல்லைக்கெட்டாத காலத்திலே, வில் யாழ்’ எனப் பெயரிய குழவியாய் உதித்து, மழலைச் சொல் பேசி, இடையர், இடைச்சியரை மகிழ்வித்து, ‘சீறியாழ்’ என்னும் பேதைப்பருவச் சிறுமியாகிப், பாணனொடும், பாடினியொடும் நாடெங்கும் திரிந்து, ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன்சொற்கூறிப், பின்பு’பேரியாழ்’ என்னும் பெயரொடு பெதும்பைப்பருவம் எய்தி, பாணரொடு சென்று, குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ் புலவரும், கொடை வள்ளல்களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரை பகர்ந்து, அதன் பின் மங்கைப்பருவமெய்தி, அப்பருவத்திற்கேற்ப, புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப்பருவம் வந்தெய்தலும், திருநீலகண்டப் பெரும் பாணரொடும் மதங்க சூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம் வந்து, தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தை உருக்கி, முத்தமிழ் விரகராற் பாராட்டப்பட்டு, அரிவைப்பருவம் வந்தெய்தலும் அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர் பாங்கியாகி, அவர்க்கேற்ற தலைவரை அவர் பாற் சேர்த்து, சீரும் சிறப்புமெய்தி நின்ற ‘யாழ்’ என்னும் மென்மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்”

என்று வருந்திய விபுலானந்தர் சுமார் 15 வருடங்களாக ஆராய்ந்து யாழ் நூல் என்ற அதி அற்புத ஆராய்ச்சி நூலை எழுதி, 6.6.1947இல் அரங்கேற்றி, யாழ் என்ற மரபிசைக்கருவியை மீட்டெடுத்து, தமிழ் நல் உலகுக்கு அளித்து விட்டு, அவர் அதற்கடுத்த மாதம் 19.7.1947இல் இவ் உலக வாழ்வை விட்டு மறைந்தார்.

முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்படும் விபுலானந்தரின் மறைவு நாளை இலங்கை அரசு தமிழ் மொழி தினமாகப் பிரகடனப்படுத்தியதோடு தபால் தலையும் வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் விபுலானந்தரின் ஞாபகார்த்தமாக 29.5.82இல் ஆரம்பிக்கப்பட்ட விபுலானந்தா இசைநடனக் கல்லூரி இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டு 4 வருட நுண்கலை மானி பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தர் தமிழ் உந்தித் தள்ளிய காலத்தின் விளைபொருள்.

சுவாமி விபுலானந்தர் பற்றிய ‘தமிழ் தடம்’ என்ற நிகழ்ச்சி SBS வானொலியில் 2.4.17 அன்று ஒலிபரப்பானது. அதன் ஒலி வடிவத்தை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-swami-vipulananda?language=ta





பின்னிணைப்பு:

அவருடய ஆங்கிலவாணி என்ற கட்டுரைப்பகுதி ஆங்கில கலைவளம் சிறந்தோங்கிய வரலாற்றைத் தமிழிலே தந்திருக்கிறது. அத் தமிழும் சொன்னவாறும் ஒரு பெரும் வரலாற்றைச் சில பக்கங்களில் அடக்கிய திறனும் வியந்து வியந்து மகிழத் தக்கதாக இருக்கிறது. ‘சித்தன்கொட்டில்’ என்ற வலைப்பூவில் கிட்டிய இவ் அரிய கட்டுரைக் கோவையை அதன் அழகு சாரம் கொள்ளளவு நிமித்தம் இங்கும் அதனை பதிவேற்ற விரும்பினேன்.

சித்தன் கொட்டிலுக்கு நன்றி.

http://www.kottil.com/2006/05/blog-post_22.html

....................................

ஆங்கில வாணி

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் „கவிவனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறோம்“ என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை


ஆங்கில வாணி

திருமலிந்தோங்கிய நிலவுலகத்தின் வடமேற்குக்கோடியிலே, பவளம் பொலிந்து விளங்கும் ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை ஆராயப்புகுமுன், அந்நாட்டு மக்களது வரன்முறையை ஒரு சிறிது அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நாற்றிசையினும் கடலினாற் சூழப்பட்ட பிரித்தானியா என்னும் தீவின் வடபாலிலே ஒருபகுதி, ஸ்காட்லாந்து எனப்படும். மேற்றிசையிலே ஒருபகுதி, உவேல்சு எனப்படும். இவ்விருபகுதியும் நீங்கலாக எஞ்சி நின்ற பெரும்பாகம் இங்கிலாந்து (அங்கிளத்தரை) எனப்படும். ‚அங்கிளர்’ என்னும் மொழிதிரிந்து ஆங்கிளர், ஆங்கிலர், இங்கிலீஷ் எனவாயிற்று. தெற்குக் கரையிலே சுண்ணக் கற்பாறைகள் மருவிக் கடலிலிருந்து நோக்குவோருக்கு கரை வெண்ணிறமாகத் தோற்றுதலின், ஆங்கில நாட்டுக்கு அல்பியன் (albion) வெண்ணிறத்தீவு, சுவேதத்துவீபம் என்னுங் கவிதைப் பெயருண்டு. மேறிசையிலே கடலுக்கப்புறத்திலே ஐர்லாந்து என்னும் தீவு உளது. இது பசும் புற்றரைகள் செறிந்திருத்தலின், மரகதத் துவீபம் எனும் கவிதைப் பெயர் பெற்றது.

மேற்குறித்த நான்கு தேசங்களிலும் வாழும் மக்கள் வெவ்வேறு இனத்தினர். ஸ்கொட்ஸ், உவெல்ஷ், இங்கிலீஷ், ஐரிஷ் என்னும் நான்கு இனத்தவரும் ஆதியிலே வழங்கிய மொழிகளும் நால்வேறு ஆவன. பூர்வத்தில் இவர்கள் கைக்கொண்ட சமயமும் வேறு. ஆங்கிலர் வருவதற்கு முன் பிரித்தானியாவின் கீழ் , தென் பாகங்களில் வாழ்ந்த மக்கள் பிரித்தன் என்னும் இனத்தினர். இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பின்றி நாகரிகம் குறைந்தவர்களாயிருந்தனர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே இத்தாலி தேசத்தின் தலைநகரமாகிய உரோமாபுரியானது பெரிய சரக்கரவர்த்திகளுக்குரிய இராசதானியாக விளங்கியது. இச் சக்கரவர்த்திகள் தங்கள் இயற்பெயரோடு சீசர் என்னும் விருதுப் பெயரினச் சார்த்தி ஆகஸ்தஸ் சீசர், திபேரியஸ் சீசர், கிளோடியஸ் சீசர் என்றித்தகைய பெயர்களைத் தாங்கினார்கள். சீசர் என்னும் பெயரினைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவர் யூலியஸ் சீசர் எனப் பெயரிய பராக்கிரமசாலி. இவர் உரோமாபுரிச் சேனைகளுக்குத் தளபதியாகச் சென்று பல நாடுகளை மேற்கொண்டு உரோமச் சக்கராதிபத்தியத்தின் எல்லையை அகலச் செய்தார். கிளோடியஸ் சீசர் காலத்திலே கி.பி. 43 ஆம் ஆண்டிலே, பிரித்தானியாவின் தென்கீழ்ப்பாகங்கள் உரோமரது ஆளுகைக்குட்பட்டன: வடபாலிலுள்ள கலிடோனியா எனப்படும் ஸ்கொட்லாந்தை உரோமர் கைப்பற்றவில்லை. நானூறு ஆண்டுகளுக்கு உரோமர் ஆங்கில நாட்டை ஆண்டனர். அக்காலத்திலே அவர்கள் அமைத்த பாதைகளும், பாலங்களும் இன்றும் இருக்கின்றன. உரோமச் சக்கராதிபத்தியம் நிலைகுலைந்த காரணத்தினாலே உரோமர் வெளியேறிய பின், வடபாலிலுள்ள ஸ்கொட்ஸ் தெற்கே வந்து ஆநிரைகளைக் கவர்ந்து பிரித்தானியரைச் சிலகாலம் துன்புறுத்தினர்.
ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஜெர்மனி, ஸ்கண்டிநேவியா (இக் காலத்து நோர்வே, சுவீடன்) நாடுகளிலிருந்து கடல் கடந்து சென்ற சாக்சனியரும், அங்கிளரும் பிரித்தானியாவின் கீழ்த்திசையிலே, சில பகுதிகளைப் பற்றி ஆளுகை புரிந்தனர். தேன்மார்க் நாட்டினராகிய தேனர் அவரை மேற்கொண்டு தம்மாணை செலுத்தினர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு நாடு பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு வந்து குடியேறினோர் பலருடைய கலப்பினாலே ஆங்கில மக்கள் தோன்றினர். வாடைக்காற்றுக்கஞ்சாது சிறு படகுகளிலே கடல்மீது சென்ற வைக்கிங்ஸ் என்னும் ஆங்கில முன்னோர் போர்த்தொழிற் பிரியராயிருந்தனர். பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த குறுநில மன்னரைப்போலப் பூர்வ ஆங்கிலரும் ஒருவரோடொருவர் போர்மலைந்து கொண்டிருந்தனர். சிறையாகப் பிடிக்கப்பட்டு உரோமாபுரியை அடைந்த ஆங்கில இளைஞர் சிலரைக் கண்ட கத்தோலிக்க கிறீஸ்தவ சமயத் தலைமைப் பீடாதிபதியாகிய பாப்பரசர் அவ்விளைஞர்கள் தோற்றப் பொலிவை நோக்கி வியந்து இவர்கள் ‚அங்கிள்ஸ்’ அல்ல ‚ஏஞ்ஜெல்ஸ்’ (வானவர்) எனக்கூறி ஆங்கில நாட்டிலே கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும்படி சில குருமாரை அனுப்பினர்.
கிறிஸ்தவ சமயம் புகுவதற்கு முற்பட்ட காலத்திலே, அங்கிள சக்ஸன் என்னும் பூர்வ ஆங்கிலத்திலே பெயவுல்வ் (Beowulf) எனப்பெரிய காப்பியமொன்று இயற்றப்பட்டது. இதன் பகுதிகள் இன்றும் இருக்கின்றன. கிறிஸ்து சமயம் புகுந்தபின் பழைய போர்த்தொழிலைக் கைவிட்டு மக்கள் கட்டுகடங்கி வாழத் தொடங்கினர். கவிகளும் சமய சம்பந்தமான நூல்களை ஆக்கினர். கேய்ட்மன்(Caedmon) கயின்வுல்வ்(Cynewulf) அல்பிரட் அரசர்(King Alfred) என்றின்னோர் ஆக்கிய நூல்கள் சமய சம்பந்தமானவை.

கி.பி. 1066 ஆம் ஆண்டிலே, பிராஞ்சு தேசத்தின் வடபாலிலுள்ள நோர்மாண்டி நாட்டுச் சிற்றரசனாகிய உவில்லியம் என்பான், ஆங்கில நாட்டின்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டு அந் நாட்டின் முடிமன்னனானான். இவனை உவில்லியம் –த-கொங்கரர்- ’வாகை சூடிய உவில்லிய மன்னன்’ எனச் சரித்திர நூலாசிரியர் கூறுவர். இம்மன்னனோடு நோர்மானிய, பிராஞ்சியர் அநேகர் ஆங்கில நாட்டிலே குடியேறினர். ஆங்கில மொழியும் நோர்மானிய பிரஞ்சுப்பதங்களை ஏற்று வழங்கத் தொடங்கியது. அதனாற் பாஷையானது வலமெய்தியது. ஆயினும் நாட்டிலே அரசியற் கலக்கமிருந்தமையின், பெரிய நூல்கள் தோன்றவில்லை. முந்நூறாண்டின் எல்லையிலே நோர்மான் பிராஞ்சியர் வேறுபாடின்றிக் கலந்து ஆங்கிலரோடு ஒன்றாயினர். நாட்டிலும் சமாதானம் நிலவியது.

கி.பி. 1340 முதல் 1400 வரையும் வாழ்ந்த சாசர் (Chaucer) என்னும் கவியை ஆங்கிலக் கவிதைவானின் உதயதாரகையென இலக்கிய வரன்முறை ஆசிரியர் கூறுவார். இவர் முதலிலே தோன்றிய காரணத்தினாலே பெருமையுற்றனரேயன்றிக் கவித்திறமையினால் அல்ல. பிராஞ்சிய செய்யுள் மரபினைப் பின்பற்றிப் புது யாப்புமுறைகளை வழங்கினார். கந்தர்பெரி எனப் பெயரிய ஆலயத்திற்கு யாத்திரை புரிந்த யாத்திரிகர்கள், வழியிலே ஒரு சத்திரத்தில் இறங்கி நிற்கும் போது தத்தமது யநுபவத்திலே கண்டறிந்த சரித்திரம் ஒவ்வொன்றைக் கூறுவதாக அமைத்துக் கந்தர்பெரிக் கதைகள் என்னும் காப்பியத்தையும் சில சிறு நூல்களையும் சாசர் வகுத்தார். சாசர் காலத்திலிருந்த ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த ஸ்பென்சர்(கி.பி. 1552-1599) என்னும் மகாகவி கவிஞர்க்குள் கவிஞர் எனப் போற்றப்பட்டார். இவரியற்றிய அரமடந்தையார் இராணி (Fairy Queen) என்னும் பெருங்காப்பியம் கவிநயம் நிறைந்தது, கற்பனையிலும் செஞ்சொல்லாட்சியிலும் நமது சீவகசிந்தாமணியை நிகர்த்தது. ஸ்பென்சர் காலத்திலே ஆங்கில நாட்டிலே அரசு புரிந்த எலிசபெத்து இராணி இல்வாழ்க்கையுட் புகாமல் , மணிமுடிசூடி நாட்டினைப் பரிபாலித்தலிலே முழுமனத்தையும் செலுத்தி வந்தாள். பாவாணர்களயும் சேனைத்தலைவர்களையும் பாராட்டி அவர்களுக்கு வேண்டுவன நல்கினாள். அதனாற் கவிதை வளம் எய்தியது.

மக்களுடைய சிந்தை விசாலிப்பதற்கு வேறு சில சரித்திர நிகழ்ச்சிகளும் ஏற்பட்டன. அவற்றைச் சுருக்கமாக் கூறுகின்றாம். எலிசபெத்து இராணியே ஸ்பென்சரது பெருங்கப்பியத்திற்குக் கவிதைத் தலைவி. எலிசபெத்தின் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையிலே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. இம்மன்னன் ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாக விவாகஞ் செய்து இராணியாக்குதல் கருதி, அவ்வாறு செய்தற்கு உத்தரவளிக்கும்படிக்குத் தனது சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரை வேண்டினான். கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையின் மணந்த மனைவியை நீக்குதல் மரபண்று ஆதலின், பாப்பரசர் உத்தரவளித்திலர். ஹென்றி மன்னன் அவரது ஆணைக்கு அடங்காது, ஆங்கில நாட்டின் தலைமையோடு அந்நாட்டு மக்களின் சமய நெறித் தலைமையையும் தானே தாங்குவதாக முற்பட்டுக் கத்தோலிக்க சமயத் தொடர்பினின்று நீங்கி, ஆங்கில திருச்சபையென ஒன்றினையேற்படுத்திச் சில சமய அத்தியஷர்களத் தன்வசப்படுத்தித் தன் கருத்தை நிறைவேற்றினான். இதனால், ஆங்கில நாட்டு மக்களின் சிந்தையிலே ஒரு புத்துணர்ச்சியேற்பட்டது.

ஐரோப்பியர், அமெரிக்காக் கண்டத்தினைக்கண்டு பிடித்தது மற்றொரு விசேஷ நிகழ்ச்சி. கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்னும் மீகாமன் ஸ்பானியா தேசத்து இராணியாகிய இசபெல்லாவின் பொருளுதவியைப் பெற்றுக்கொண்டு மேற்குக் கடலைக் கடந்து இந்தியாவுக்குச் செல்லும் ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கமாகச் சில பாய்க் கப்பல்களை அமைத்துக் கொண்டு புறப்பட்டான். அக்காலடத்தில் நமது பாரத நாடு பெருஞ் செல்வமுற்ற நாடாக விளங்கியது. நமது நாட்டு விளைபொருள்கள் அராபிக்கடல்,பாரசீகக்கடல், செங்கடல் வழியாகச் சென்று பின்பு தரைவழியாகவும், மத்தித்தரைக்கடல் வழியாகவும் இத்தாலி நாட்டுத் துறைமுகங்களை அடைந்தன. வேனிஸ் நகரம் சிறந்த வர்த்தக ஸ்தலமாக விளங்கியது. இந்தியாவில் இருந்து சென்ற பட்டுத்துணிகளும், பொன்னும், முத்தும், யானைத்தந்தமும், மிளகும்,சந்தனமும், இலவங்கப்பட்டையும் பிறவும் மேனாட்டு மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தன.

பூவுலகம் கோளவடிவமானது எனும் கருத்து மெனாட்டிலே பரவிய அக்காலத்திலே கிழக்கு நோக்கி இந்தியாவுக்குச் செல்ல ஒரு பாதை இருப்பதினாலே மேற்கு நோக்கிச் செல்லவும் ஒரு பாதை இருக்க வேண்டுமெனும் எண்ணம் கல்வியறிவுடையோர் சிந்தனையில் உலவியது. கொலம்பஸ் புறப்பட்டு இந்தியாவுக்குச் செல்லும் வழி காண்பதற்கு; ஆனால் கண்டு பிடித்தது அமெரிக்காக் கண்டத்தை. கி.பி. 1642 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே கொலம்பஸ் மத்திய அமெரிக்காவிலே சில தீவுகளை அடைந்தான். அக் காலத்திலே மத்திய அமெரிக்காவிலே மெக்சிக்கோ, பீரு என்னும் நாடுகள் சிறந்த நாகரிகம் அடைந்திருந்தன. மிகப் பழைய காலத்திலே,தமிழ் நாட்டு வணிகர் கிழக்கு நோக்கிக் கடல் கடந்து சென்று மத்திய அமெரிக்காவை அடைந்தனர் என்றும் அங்கு நிலவிய நாகரிகம் நமது நாகரிகத் தொடர்புடையதென்றும் அறிஞர் கருதுகின்றனர். சாமன் லால் என்னும் ஆசிரியர் எழுதிய இந்து அமெரிக்கா என்னும் நூலிலே பல் சான்றுகளோடு இவ்வுண்மை நிறுவப் பட்டிருக்கிறது. அஃது ஒரு பாலாக மேனாட்டாராகிய கொலம்பஸ் மீகாமன் அமெரிக்காவைக் கண்டு பிடித்த பின் ஸ்பானியா தேசத்து மக்கள் துப்பாக்கியோடு சென்று மத்திய அமெரிக்க மன்னரைத் தந்திரத்தாலும் துப்பாக்கி வன்மையாலும் சிறைப்படுத்தி அவர்கள் குவித்து வைத்த பொன்னைக் கவர்ந்து கொண்டு தம்மூர்க்கு வந்தனர். ஆங்கில நாட்டினராகிய கடற்கொள்ளைக்காரர் இடையில் நின்று அப்பொன்னின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு தம்மூர்க்குச் சென்றனர். அஃதன்றியும் எலிசபேத் இராணியின் அரசியலாற்றலினாலே ஆங்கில நாட்டுச் சைனியங்கள் சில போர்க்களங்களிலே ஸ்பானிய சேனைகளை வெற்றி கொண்டன. ஐரோப்பாவின் மேற்குக் கரையில் உளவாகிய போர்த்துக்கல், பிரான்சு, ஒல்லாந்து நாடுகள் கடல் வர்த்தகத்தினாலேயே பொருளீட்டினவெனினும், பொருளும் கடற்படையுந் திரட்டியவகையில் ஆங்கில நாடே முன்னணியில் நின்றது.

மேனாட்டார் அறிவு விசாலிப்பதற்குரிய மற்றொரு நிகழ்ச்சி அராபியா தேசத்திலே நிகழ்ந்தது. திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டில் இருந்த காலத்திலே அராபியா நாட்டு மக்கா மா நகரிலே முகம்மது நபி அவதரித்தார். நபியின் சிஷ்ஷிய பரம்பரையில் வந்தோர் மேற்கேயுள்ள பலநாடுகளிலே ஆணை செலுத்தி அரசு புரிந்ததோடு கூட அறிவொளி விளங்குமாறுஞ் செய்தார்கள். கிறிஸ்து நாதர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னே யவனபுரத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இயற்றிவைத்த அரிய கலைநூல்கள் அராபியர் வழியாக மேனாட்டிலே பரவி அறிவொளிபரப்பின. யவனவாணியின் செல்வப் புதல்வியருள் ஒருவராக ஆங்கில வாணி உதித்தாள்.
ஆண்டவன் ஒருவனேயாயினும் பற்பல நாட்டு மக்கள் அவனுக்குப் பற்பல திருநாமங்களைத் தந்து வழிபடுமாறு போலச் சொல்லின் கிழத்தியாகிய கலைவாணியும் பற்பல நாட்டு மொழிச்சார்பினாலே பற்பல உருவங்களை வகித்தாள். ஆதியிலே நான்முகக்கடவுளது நாவிலிருந்து வேதத்தையருளி, இடைக் காலத்திலே வேதவியாசரது நாவினின்று மகாபாரதத்தைத் தோற்றுவித்துக், காளிதாசனையுள்ளிட்ட உத்தமக் கவிகளது நாவிலே களிநடம் புரிந்தாள் ஆரியவாணி. இமயத்திற்கு வடபாலதாய் உத்தர குருவெனப் புராணங்கள் கூறும் போக பூமியையுள்ளிட்டதாய், நாற்பது கோடி மக்களுக்கு உறைவிடமாகிய சீனத்திலே தோன்றிய கவிவாணரது நாவினை இருப்பிடமாக்கிக்கொண்டாள் சீனவாணி. பண்டைக் காலத்திலே, யவனபுரத்தாரோடு போர் மலைந்தும் நட்புப் பூண்டும் மேற்றிசைக்கும் கீழ்த்திசைக்கும் நடு நாடாகி, அக்கினி தேவனை வழிபடுவோருக்கு உறைவிடமாகிப் பொலிந்த செல்வப் பாரசீகப் பழந்தேசத்து மக்கள் களிகூரும் வண்ணம் அந்நாட்டுப் புலவர் நாவினின்று கவிசுரந்தளித்தாள் பாரசீக வாணி. ஹோமார் என்னும் அந்தகக் கவியின் நாவிலிருந்து துரோயம் என்னும் ஈலிய நாட்டிலே நிகழ்ந்த போரினை விரித்துக் கூறும் ஈலிய காவியமும் அப்போர்க் களத்திலே சிறந்து விளங்கிய உலீசன் (Ulysses Odysses)என்னும் வீரனது நிகழ்ச்சிகளைக்கூறும் உலீச காவியமும் ஆகிய வீர காவியங்களை அளித்தும் , ஐய்க்கிலீஸ், அரிஸ்தொபனீஸ், இயூரிப்பிடீஸ், என்னும் நாடகக் கவிகள் வாயிலாக என்றும் புலராது யாணர் நாட் செல்கினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையவாக்ய அழகிய நாடகங்களை அளித்தும், பிண்டார் என்னும் கவிவானர், சஃபோ என்னுங் கவியரசி வாயிலாக அகப்பொருட்டுறை தழுவிய இசைப் பாடல்களைத் தோற்றுவித்தும் சோக்கிரதீஸ், பிளேத்தோ, அர்ஸ்தாத்தில் என்றித் தொடக்கத்த தத்துவஞானிகள் வாயிலாக உண்மைநூல், ஒழுக்கநூல்களைத் தோற்றுவித்தும் பண்டை யவன மொழிக்கு ஆக்கமளித்தாள் யவன வாணி. உரோமவாணி, இத்தாலியவாணி, ஜெர்மானிய வாணி,பிராஞ்சியவாணி யென்றின்னோரெல்லாம் யவனவாணியின் செல்வப் புதல்வியரேயாவர்.

கணிதம், சிற்பம், வைத்தியம், காவியம், தர்க்கம், தத்துவம் என்னும் அருங்கலைகளுக்கெல்லாம் தாயகம் யவனபுரமேயாகும். ஆதலினாலன்றோ, மேனாட்டுக் கலைக்கழகங்களிலே, யவனபுரத்து மொழியாகிய கிரேக்க மொழியும் உரோமருக்குரிய லத்தீன் மொழியும் பெரிதும் கற்கப்பட்டு வருகின்றன. எலிசபெத் இராணி காலத்திலே, அமெரிக்காக் கண்டத்துப் பொருட்செல்வமும் பழைய யவன புரத்துக் கலைச் செல்வமும் ஆங்கிலநாட்டுக்குரியவாயின. ஸ்பென்சர் என்னும் மகாகவி ‚அரசமடந்தையர் இராணி’ என்னும் பெருங்காப்பியத்தோடமையாது அழகு பொருந்திய சிறு காப்பியங்கள் பலவற்றையும் செய்தார். ”ஆயன் நாட்குறிப்பு“ என்பது அவற்றுள் ஒன்று. இது இயற்கை வனப்பினக் கூறுவது.

பலவகையிலும் ஆங்கில நாடு பொலிவுற்ற இக்காலத்திலே தான் செகசிற்பியார்(சேக்ஸ்பியர்) என்னும் சிறந்த நாடகக் கவி தோற்றினார். இவருடைய கவி வனப்பினை மதங்க சூளாமணி என்னும் நூலிலே சற்று விரிவாகக் கூறியிருக்கின்றாம். யூலியஸ் சீசர் என்னும் நாடகத்தின் ஒரு பகுதியின் பமொழிபெயர்ப்பை ஈங்குத் தருகின்றோம். இந் நாடகத் தலைவராகிய யூலியஸ் சீசர் பராக்கிரமசாலியென்றும் சேனைத் தலைவரென்றும் முன்னர்க் குறிப்பிடப்பட்டார். உரோமாபுரியில் வாழ்ந்த காஷிஸ் எனப் பெரிய சனத் தலைவனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறியஸ், டெகியஸ், சின்னாகிம்பர் என்பாரையும் நீதிமானும் யூலியசீசரது நண்பனுமாகிய மார்கஸ் புரூட்டஸையுந் தன்வயப்படுத்தி பங்குனித் திங்களில் நண்பகலில், அத்தாணி மண்டபத்தில், யூலியஸ் சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன். குறித்த தினத்திற்கு முன்னாளிரவில், விண்வீழ் கொள்ளிகளும், தூம கேதுக்களும் பலவகை உற்பாதங்களுந் தோன்றின. யூலியசீசரின் மனைவி கல்பூர்ணீயா தீக்கனாக் கண்டு அச்சமுறெழுந்து புறத்தே நிகழ்கின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலெழுந்திருந்து காலைப்பொழுது வந்ததும் கணவனது முன்னிலையை அடைந்து

பேரிரவில் நடந்ததெல்லாம் பீழையினை விளக்கப்
பேதலிக்கும் உளச் சிறியேன் பேசுகின்ற மொழிகள்
ஆருயிர்க்குத் தலைவ! நினதருட் செவியில் வீழ்க,
அகத்திடையின் றிருந்திடுக, அவைபுகுத லொழிக,
எனக்குறையிரந்து வேண்டி நின்றாள்.
அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத் (து)
ஆடவர்(க்) ஒரு மரணம். அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர்என் றறிந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூ டரைக் கண்டாற் புன்னகை செய் பவன்யான்.

இன்னலும் யானும் பிறந்த தொருதினத்தில் அறிவாய்
இளம் சிங்கக் குருளைகள் யாம்; யான் மூத்தோன் எனது
பின் வருவது இன்னல் எனப் பகை மன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
எனக் கூறினார்.

இத்தருணத்தில் டெசியஸ் என்பவன் வந்து அத்தாணி மண்டபத்திற் குழுமிருந்த முதியோர் சீசரை அழைத்து வருமபடி சொல்லியதாகத் தெரிவித்தான். சீசர் முதலிலே மறுத்துப் பின்பு இசைந்து உடன் போயினார். வழியிலே ஒரு சேவகன் ஒரு நிருபத்தைக் கொண்டு வந்து கொடுத்து இது சீசருடைய சுகத்தைக் கோரியது. இதனை உடனே படித்தருள வேண்டும் எனச் சீசர் கையிற் கொடுத்தனன். நல்லது நண்ப சனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபணங்களைப் படித்த பின்பு இதனைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கி நடந்தனர். அங்குச் சிம்பர் என்பவன் முற்பட்டு வந்து முழந்தாற்படியிட்டு நின்று மகோதாரிய மகா பிரபுவே ஏழையேனது விண்ணப்பத்திற்கிரங்கி சகோதரனை மன்னித்தருள வேண்டும் என வேண்டி நின்றனன். சீசர் அவனை நோக்கித்,

“தாழ்ந்து மென்மொழியுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக்கிரங்கிய வீணர்.
சூழ்ந்து செய்தன துடைத்துப் பின் சோர்வினையடைவார்
ஆழ்ந்து செய்வன செய்யும் யான் அவர்நெறி அணையேன்“

„அண்ணல் நீர்மையேன் பிழைசெயேன் அணுவளவேனும்
நானும் நீதியிற் பிரிந்திடேன் நானெனக் கதறிக்
கண்ணில் நீர் மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும்
எண்ணம் முற்றுறும் என்னனீ எண்ணுவதிழிவே“

எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ் புரூடஸ் சீசரை நோக்கி ’ஐய, நான் இச்சகம் பேசுவேனல்லேன், தேவரீரது திருக்கரத்தை முத்தமிட்டேன் . சிம்பரரின் விண்ணப்பத்திற்கிரங்கி அவரது சகோதரனை விடுதலை செய்தல் வேண்டும்.’ என்றனன். சமீபத்தில் நின்ற காசீயஸ் சீசரை நோக்கி, ‘மகிமை பொருந்திய சீசரே மன்னிக்க வேண்டும், உம்மிரு தாளினையும் பற்றினேன், சிம்பரின் சகோதரனை விடுவிக்க வேண்டும்“ என்றனன். சீசர் தம்மைச் சூழ்ந்து நின்று விண்னப்பித்தோரை நோக்கி,

இரங்குதிர் என்ன இரக்கும் நீர்மையர்
தமைப்பிறர் இரக்கிற் றையக்காட்டுனரே
நும்போல் வேனெனின் நும்மொழிக்கு இசைவேன்
வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும்
தற் சூழ்ந் தசையத் தானசைவின்றி நிலைபெறுதுருவன்
நிலைமை கண்டிரரே?
வான் மீன் அனையர் மாநில மாந்தர்
துருவன் அனையன் ஒருவனிங்குளலால்
அவந்தன் யான் என அறிகுவீர் புகன்ற
மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்
மலை வீழ்வெய்தினும் மனம்வீழ்விலேனே
எனக் கூறினார். இதனைக் கேட்ட புரூட்ஸ் ஆதியோர் சீசரது பெருமிதயுரையை தற்பெருமையுரையெனவெண்ணி உடைவாளயுருவி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினார்கள். ’நீயுமா புரூட்டஸ்’ என்னும் உரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர்.




ஆங்கில வாணி 11
கீழே இரண்டாவது பகுதி


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை

ஆங்கில வாணி-II


தொடர்ச்சி:

பிளூத்தாக் (Plutarch) எனப் பெயரிய யவனபுரத் தறிஞர் இயற்றிய வீரர்வாழ்க்கைச் சரிதங்கள் என்னும் நூலின் வழியாக அனேக சரித்திரங்களையும், ஆங்கிலநாட்டு மன்னர் சரித்திரங்கள் பலவற்றையும் செகசிற்பியர் நாடகமாக்கி உலகிற்கு அளித்தார். ஆங்கில மொழி உலகில் வழங்குங் காலம் வரையும் இப்பெருங்கவியின் பெயர் நின்று நிலவும். ஆங்கில நாடு பெருஞ் சிறப்புற்றிருந்த காலத்திலே தோன்றிய செகசிற்பியாரைப் போலத் தமிழ்நாட்டு மன்னர் கடல்கடந்து சென்று பல நாடுகளிலும் தமது வெற்றிக்கொடி நாட்டிய காலத்திலே தோன்றிய கம்பநாடர், உலகு புகழும் வனப்பு வாய்ந்த காப்பியத்தை வகுத்தளித்தார். வீரத்தையும், ஆண்மையையும் மக்கள் நேர்மையையும் சித்தரித்துக் காட்டும் வகையிலே இரு பெருங்கவிஞரும் ஒத்தபான்மையர்; இருவர் நாவிலும் நின்று கவிதை சுரந்தளித்தவள் ஒருத்தியன்றோ?

இக்காலத்திலே மில்தனார் எனப்பெரிய காப்பியக் கவியும் வாழ்ந்தார். யவனபுரத்துக் காவியங்களிலே நன்கு பயின்று, அவை தம்முட் பொதிந்த வனப்பு விளங்கச் செய்யுள் செய்தார். அவரியற்றிய பெருங்காப்பியம் ‚சுவர்க்க நீக்கம்’ எனப் பெயரியது. இதன் ஒருபகுதியினைத் தமிழ்ப்பெருங்கவி வெ.ப.சுப்பிரமணியமுதலியாரவர்கள் தமிழ் விருத்தச் செய்யுளில் மொழிபெயர்த்துள்ளார்கள்.

தேவாசுர யுத்தங்கூறுதலின் இந்நூல் கந்தபுராணம் போன்றது. வானுலகத்திலே ஆண்டவன் முன்னிலையிலிருந்த தேவர்களின் மூன்றின் ஒருபகுதியார் இறைவனாணைக்கு அமைந்து நடக்காத காரணத்தினாலே நரகராயினர். இவர்கள் தலைவனாகிய ஒளிவண்ணன் சாத்தானாயினான். இந்த எல்லையிலே, இறைவன் இம்மண்ணுலகையும் புல், பூண்டு, மரஞ்செடி, கொடி, பறவை, விலங்கு, மீன் எனும் இவற்றையும் படைத்து இறுதியிலே மன்பதைக்குத் தந்தை தாயாராகிய அத்தனையும், அவ்வையையும் படைத்து அவர் தம்மை ஏதேன் எனும் உவவனத்தில் இருத்தினார். இவ்வுவவனம் பேரழகுடையது. இதன் நடுவிலே கலை ஞானத்தருவிருந்தது. அதன் கனியை உண்ணவேண்டாமென்று ஆதித்தந்தை தாயாருக்கு ஆண்டவன் ஆணையிட்டிருந்தனர். சாத்தான் அவர்களை வஞ்சித்துக் கனியை உண்ணுமாறு செய்தனன். அக்குற்றத்திற்காக அத்தனும் அவ்வையும் பூலோக சுவர்க்கமாகிய உவவனத்திலுருந்து துரத்தப்பட்டனர். இதுவே காப்பியத்தின் கதை.
ஐந்தாம் பரிச்சேதத்தின் தொடக்கத்திற் சில அடிகளின் மொழி பெயர்ப்பினைத் தருகிறோம்.

நித்திலத்தை வாரி நிலத்தில் உகுத்தது போல்
காலைப் பரிதி கதிர் காலும் வேளையிலே,
உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்,
நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ் அத்தன்
இளங்காற் றிசையொலியும், இன்ப இலையொலியும்,
வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்,
பள்ளி யெளிச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்,
ஆரா உவகைதர, அன்பிதயத் துள்ளூரச்,
சீரார் இளமான், திருமகள் போல்வாள் அவ்வை,
காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்
வைகறையில் முன்னெழுவாள் மலர்ச் சயனம் விட்டகலாச்
செய்கையினை நோக்கி, அவள் செந்தா மரைவதனம்
ஏறச் சிவந்த இயல்பும், மலர் கூந்தல்
சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி,
எழிலார் மட நல்லார் இன்றுயிலுஞ் சீரிதே
என்னவுளத் தெண்ணி இளந்தென்றல் மென்மலர்மேற்
சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்,
„என்னா ருயிர்த் துணையே; ஈசன் எனக்களித்த
செல்வ நிதியே செழுந்துயில்நீத் தேயெழுவாய்,
புத்தமிழ்தே!, அன்பே புலரிப் பொழுதினிலே,
வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன் அருந்தும்
விந்தையினைக் காண்போம், விழிதுயில்நீத் தேயெழுவாய்,
வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தனகாண்“ என்றுரைத்தான்;
ஆங்கவளும் இன்றுயில்நீத் தன்பன் முகநோக்கி
„மேதகவு செம்மைநெறி மேவியஎன் னன்பரே!
காதலரே! நும்முகமும் காலை இளம்பொழுதும்
கண்டேன்; கவலையற்றேன்; கங்குற் பொழுதினிலே,
கனவோ நனவோ நான் கண்டதொரு காட்சியினை
விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்,
நாளின்பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்
துன்ப மறியாத் தொடக்கறியா வாழ்க்கை துய்த்தேன்;
கடந்த இரவிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்;
நின்குரல்போல் மென்குரலில், நித்திரையோ அவ்வையே!“
இனிய நிசிப் பொழுதில் எவ்விடத்தும் மோனநிலை.
வட்ட மதியம் உயர்வானின் றொளிகாலும்;
இருள்குவிந்த மென்னிழலால் எங்கெங்கும் எப்பொருளுங்
கண்ணுக் கினியகண்டாய், காரிகையே! வானுறையும்
விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்
கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ,’ ‚என்றுரைக்க
எழுந்தெங்கும் நோக்கினேன்; இன்குரலின் பின்சென்றேன்;
ஞானத் தருவிடத்தை நண்ணினேன், ஆங்கொருவன்
வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வான்;
“கண்ணுக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
உண்ணத் தெவிட்டா உணர்வமிழ்தச் செங்கனிகள்
எண்ணென் கலைஞான இன்கனிகள் தாங்கிநின்ற
செல்வ மரமே நின் செழுங்கிளைகள் பாரித்த
தீங்கனியை மானிடருந் தேவர்களும் உண்டிலர்காண்;
கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?
உண்பல்யான்“, என்றான் ஒரு கனியை வாய்மடுத்தான்;
ஆணை கடந்தசெயல் ஆதலினால் நான் அஞ்சி,
ஒருபால் ஒதுங்கினேன்: உரவோன்பின் னும்மொழிவான்,
“மானிடர் இத் தீங்கனியை மாந்துவரேல், வானுலக
இன்பம் பெறுவார்; எழிற்பாவாய் அவ்வையே!
இக்கனியை உண்ணுதியேல், எழிலார் அரமகளிர்
தோற்றப் பொலிவுடனே தூயஅறி வும்பெறுவாய்;
வானத் திவர்ந்து செல்லும் வல்லமையும் நீ பெறுவாய்
நாகநாட் டோர்தம் நலம்பெறுவாய்.“ என்று சொல்லி,
ஓர்கனியத் தந்தான் உயர் மணமுந் தீஞ்சுவையும்
புலன்வழியென் சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுதேன்
ககனத் தெழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்;
மேகமியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்,
மேதினியை நோக்கி வியந்தேன்; அவ்வெல்லையிலே
கந்தருவன் சென்றுவிட்டான்; கண்டுயின்றேன் காதலரே!
கனவீ தெனவறிந்தேன் கலக்கந் தெளிந்த “ தென்றாள்.

செகசிற்பியார் காலம் கி.பி. 1564 முதல் 1616 வரை ஆகும். மில்தனார் காலம் 1608 முதல் 1674 வரை ஆகும். டிறைடன் என்னும் அகலக் கவி 1631 முதல் 1700 வரையும் வாழ்ந்தார். பாப்பு என்னும் இலக்கணக் கவி 1688 முதல் 1744 வரை வாழ்ந்தார்