Monday, September 26, 2016

நடனக் கலைஞன் சேரன்.....

உண்மைக்கு அதன் இயல்பே அழகு!

திறமைக்கு அலங்காரங்களும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் தோற்றத்தை இனம் பிரித்துக் காட்டும் அங்க வஸ்திரங்களும் தேவை இல்லை.

நேற்றய தினம் ( 25.9.2016) சேரனின் நாட்டிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

சேரன் - லண்டனில் பிறந்து சிட்னியில் கால்பதித்திருக்கும் இளந்தமிழன். இந்தியாவில் .....தம்பதியினரிடம் முறையாக நாட்டியம் பயின்றிருப்பவர். வருடம் ஒரு முறை மாத்திரம் நாட்டிய நிகழ்வு செய்பவர். அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில் மாற்றுத் திறனாளிகளாகி இருக்கும் உயிர்கள் நிமிர்ந்து மரியாதையோடு தாமாக இயங்க உதவியளித்து வரும் ’patch work' அமைப்புக்குக் கையளிப்பவர்.

எந்த ஒரு உன்னத படைப்பும் உடனே எந்த வித தாக்கத்தையும் தராது. அதன் ஏதோ ஒன்று ஆத்மாவில் சுவறி நாளாக நாளாக மெல்ல மெல்ல தன் குறிப்பிட்ட ஓரம்சத்தை நம்மில் வெளியிட்ட வண்ணம் இருக்கும்.

கடந்த வருடம் பரா மசாலா நிகழ்வில் இந்திய ‘கதக்’ கலைஞர் ஒருவரின் கதக் நடனத்தை முதன் முதலில் பார்த்தேன். உண்மைக்கு அலங்காரங்கள் தேவை இல்லை. அதன் இயல்பே அதன் அழகு என்பதை முதம் முதல் கலையூடாக புரிந்து கொண்டது அன்றைக்குத் தான்.

எந்த ஒரு அலங்காரங்களும் இல்லாத முழு வெள்ளை ஆடை. அங்கங்களை இனம்பிரித்துக் காட்டும் எந்த இயல்பும் அதில் இல்லை. உதட்டின் சிவப்பு சாயமும் உச்சம் தலையில் நெற்றிப்பட்டமும் தான் அலங்காரங்கள். சுமார் 1.30 மணி நேரம் அச் சிறு ஆனால் கச்சித நவீன அரங்கில் அவர் தனியாகவே ஆடினார். எந்த ஒரு உரையாடல் அறிமுகமும் கொடுக்காமல் அவர் முகத்தில் காட்டிய முகபாவங்களூடாக அன்பின் வலிமையை நேரடியாக அவர் பார்ப்பவர் ஆத்மாவில் பாய்ச்சி விட்டுச் சென்றது உயிருள்ளவரை என்னோடு இருக்கும். அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் வெள்ளைக் காரருக்கு. எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது ஒரு நெகிழ்வூட்டிய நிகழ்வு!!

அதற்குப் பிறகு அதைப் போல ஒன்றை என் ஆத்மா அனுபவம் செய்தது நேற்றைக்கு!!

என் தமிழுக்கு போதாமை இருக்கிறது என்று இதை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாகவே என் மீது பரிவிரக்கம் கொள்கிறேன். மணலை அரித்து அரித்து தேவை அற்றவற்றை வெளியேற்றிய பிறகு தேங்கி நிற்கும் வைரக் கற்களைப் போல புற வயங்களில் நடந்த எல்லாம் வடிந்து போய் தேங்கி நிற்கும் கருக் கற்களை மாத்திரம் குறிப்பாக எடுத்துச் சொல்வதே இப்போதைக்கு இயலுமானதாக இருக்கிறது.

1. விநாயக வணக்கம்! விநாயகர் எழுந்து வந்து விட்டார். அவர் வந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கும்.

2. நாட்டியத்தின் அடிப்படை அழகு! அலாரிப்பு

3. நவரசம்! சொந்தக் கலை படைப்பில் விளைந்த நவரச மணிகள்.

4.சிவதாண்டவ  ஸ்தோத்திரம் - தொன்மை சமயத்தின் வலிமை!! பண்பாட்டின் விழுமிய வேர்! மந்திர வலிமை...

5. ஆஞ்சநேய கெளத்துவம் - ஆஞ்ச நேய குண இயல்புகள் வெளிப்பட்ட ஒரு மனித உயிர்! ஆதன் குணங்களை வெளிப்படுத்தி ஒரு இலட்சிய மனிதனின் குண அழகு வெளிப்பட்ட அற்புதம்!!

6. பாடம் - பாரதியார் பாடல் - ஆசை முகம் மறந்து போச்சே... திறமைக்குக் - அதன் வலிமைக்கு - சேரன் கொடுத்த இடம்! கொடுத்த மேடை!! கொடுத்த நேரத் துளிகள். குரல் இசையை என்னவென்று சொல்வது...அதில் குழைந்து குழைந்து வந்த உணர்வினை உயிர் சித்திரம் எனலாமோ என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, குரலுக்கே அங்கு முதலிடம் கொடுத்து  நடனம் பின்னணியில் அமைந்ததை என்னவென்று சொல்வேன்?

பாரதி வரி ஒன்று இப்படிச் சொல்லும்,
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
காசி நகர் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்
....”

இந்தக் கலைஞன் சேரன் அதை நிகழ்த்திக் காட்டினான் அரங்கில்...! சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்களை பரிசளித்து மகிழ்ந்தது நடனம். துலங்கி மிளிர்ந்திற்று ஓர் அறிவெழில் சுடர்! திறமையை தூக்கி நிறுத்தி பெருமை கொண்டது நடனம்!!

ஆண்மா அனுபவித்தது  ஒரு கவளம் அளவு தமிழம்!

7. சுவருக்குள்ளே....! இது தான் சேரன்.... கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற கைங்கரியம் அது!! முதலில் ஒரு வெள்ளைத் திரையில் நிழல் நடனம்! திரை மேலே செல்ல விரிகிறது மேடை. தெரிகிறது மேடை. செவ்வக எல்லை! எல்லைக்குள்ளே நடக்கிறது நடனம். எல்லைக்குள்ளே நின்றவாறு வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறது கால். சில வேளை கை...போகின்ற பொழுதுகளில் ஆச்சரியமாக அவலமாக ஏன் என்ற கேள்வியோடு பார்க்கிறது மற்றய நடனம். அவ்வப்போது எல்லையை வருடிப் பார்க்கிறது உள்ளம் / மனம்....அந்த விளிம்போடு அதன் இயல்போடு நிறையக் கேள்விகள் அதற்கு.  விளிம்பிலே தொங்கிய வாறும் கீழே போயும் மேலே போயும் எட்டி எட்டிப் பார்த்தும் பயந்த வாறும் ’வெளிப்புறத்தை’ ருசி பார்க்கிறது கொஞ்சம். பிறகு முழுவதுமாக செவ்வகத்துக்குள்ளே சரணடைகிறது. செவ்வக விளிம்பில் ஏறி நின்று புரிகிறது நெடும் சாகசம். அது சிலிர்க்க வைக்கும் சாகசம். (சமூகத்தை வியக்கும் சேரனின் கலை மிளிர்கிறது; சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது அதில்.)   ஒரு கட்டத்தில் முழுவதுமாக வெளியே வந்து விடுகிறது. கொஞ்சமாய் நடனமாடவும் செய்கிறது. பிறகும் விரும்பியும் விரும்பாமலும் செவ்வகத்துக்குள்ளே சென்று நடனமாடி முடிகிறது.

மீண்டும் வெள்ளைத் திரை கீழே இறங்குகின்றது. நிழல் நடனம் நடக்கிறது. திரை மூடப் படுகிறது.

வெளிநாட்டில் வாழும் சமூகத்தை; உள்ளூர இருக்கும் அதன் இயல்பை; திரை மறைவாக நடக்கும்  அதன் தடுமாற்றங்களை இதை விட அற்புதமாய் யார் காட்டி இருக்கக் கூடும்!! இது தான் கலை!! இது தான் கலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுதல் என்பது. இது தான் கலைஞத்துவம்!  உண்மை திறமையோடு கலந்து  கலையோடு சங்கமித்த காட்சி!! சமூக அக்கறையோடு சமூகத்தை சித்திரமாய் மனதில் பதித்த சாதனை! அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் தற்காலம்!!

இது தான் அனுபவம் செய்தலுக்கான இலட்சணம்!! இலக்கணம்!!

8. மங்களம். ஐம்பூதங்களுக்கும் வணக்கம்.

அழகு என்பது தோற்றத்திலும்; அலங்காரங்களிலும்; நிறங்களின் ஆர்ப்பாட்டங்களிலும்; அங்க அவயவங்களிலும் அல்ல; அழகு என்பது திறமை! அழகு என்பது அறிவு! அழகு என்பது திறமை எங்கெங்கு இருக்கிறதோ அவ்வவற்றைப் போற்றுதல்; அவ்வற்றுக்கு உகந்த இடம் அளித்தல் - இந்த நிகழ்வு முழுவதிலும்  ஆத்மாவாக நின்ற பொருள் இது தான். மக்களுக்கு சேரன் கொண்டு சென்ற கருத்து இவைதான். கலை வாகனத்தில் இக்கருத்து ஆவாகனம் செய்யப் பட்டிருந்தது!!

ஆத்மாவை ஆசுவாசம் செய்த கலை வெளிப்பாடு!!

ஆடை அலங்காரம் மிகஎளிமையான ஆனால் மிக மரியாதையான மரியாதை ஏற்படும் படியான வடிவமைப்பு! விரசத்துக்கும் கவர்ச்சிக்கும் நளினத்திற்கும் இடம் முற்றிலுமாக மறுக்கப் பட்டு அந்த இடம்  மரியாதை; உயர்ந்த பட்ச மதிப்பு என்பனவற்றால்  நிரம்பி இருந்தன.

கண்கள் பார்க்க வேண்டியதை அறிவின்; திறமையின் பால் திருப்பிய கைவண்ணம் அது!! - ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பால் திறமையைக் கண்டன கண்கள்!! திறமை ஒன்றையே கண்டன கண்கள்!!

அது பார்வையாளர்களை அவர்கள் பார்க்க வேண்டிய திசையை; கோணத்தை நோக்கித் திருப்பியதில் சேரன் கண்ட வெற்றி!

பின்னணி இசைக்கு மேடையில் அவர் கொடுத்த இடம். திறமைக்கு அவர் நடனக் கலை மண்டி இட்ட இடம் அது!

சேரன் நீ உயர்ந்த மனிதன் அப்பா!

கலையை இன்னொரு தளத்துக்கு உயர்த்தினாய் நீ!

கலைஞன் என்பவன் யார் என்று சொன்னாய் நீ!!

எளிய ஆத்மாக்களுக்கு ஒரு பெரும் பொக்கிஷத்தைப் பரிசளித்தாய்!!

உன் உயரத்துக்கு நம்மை இழுத்து வந்து இச் சிறிய ஆத்மாவுக்கு உயர்வளித்தாய்!! ஆத்மாவை ஆசுவாசித்தாய் அப்பனே!!

நீ வாழி!! நின் கலை நீடு வாழி!!



Wednesday, September 21, 2016

தாகூர்......ரவீந்திரநாத் தாகூர்....

ஒரு கலை வடிவம் - அது இலக்கியம், ஓவியம், நடனம், சிற்பம் என விரிகிறதே 64 ஆக! அவைகளில் எதுவாக இருந்தாலும் சரி அது அந் நாட்டுப் பண்பாட்டின் ஆத்மாவை; வேரை; ஆழ அகலத்தை அதன் பாரம்பரிய வழி வந்த உள்ளடக்கத்தை பிரதி பலிக்க வேண்டும்.

ஒரு மூன்றாம் கண்களுக்கு அதாவது அன்னியப் பண்பாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு முன்னால் படைக்கப் படுகின்ற ஒரு கலைப்படைப்பு அமானுஷமாக அப் படைப்பின் பண்பாடு தாங்கி வரும் விழுமியத்தை - அல்லது பண்பாட்டின் ஏதேனும் ஓரம்சத்தை - பண்பாட்டின் ஏதேனும் ஒரு  மூலக்கூறை அந்த மூன்றாம் கண்களின் ஆத்மானுபவத்திற்குக் கொண்டு சென்றிருக்க  வேண்டும்.

ஆஹா என்று அதைக் காண்கின்ற ஆத்மா உணர்ந்து வியக்க வேண்டும். அல்லது ஓ... என ஏங்க வேண்டும். அக் கலை அம்சம்  உலகில் பிறந்த எந்த ஒரு ஆத்மாவையும் பற்றி இழுத்து வந்து ‘இது தாம் நாம்’ என்று சொல்லும் ஓர்மத்தை; ( அது நன்றோ தீதோ - எந்த ஒரு அம்சம் பாடுபொருளாய் இருந்தாலும்);  வெளிப்படுத்தி நிற்கவேண்டும். தம் மண், பண்பாடு சார்ந்த சத்து இதுவென அது சொல்ல வேண்டும். அதுவே கலைப்படைப்பு என்பது என் அபிப்பிராயம்.

ஒரு கராட்டிக் கலை; குங்ஃபு கலை; அது - சண்டைக் கலையாய் இருந்த போதும் அதைப் பார்க்கிற கண்களுக்கு அந் நாட்டுப் பண்பாட்டின் விழுமியம் புரிந்து விடுகிறதே அது மாதிரி!

நேற்றய தினம் எனக்கு அப்படி ஒரு வங்காள மொழியின்  விழுமிய விஸ்தாரத்தை அறியும் வாய்ப்பு கிட்டியது. அது ரவீந்திரநாத் தாகூரின் கதைப்பாடல்கள் வடிவில் அமைந்த அவரின் பாடல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதனை து.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தமிழ் படுத்தி இருக்கிறார்.(கவிதையில் கதைகள்; வங்காளியில் இருந்து தமிழாக்கம்;சு.கிருஷ்ண மூர்த்தி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,ஏப்பிரல் 2014; பக் 80 -83) (புத்தகம் கிட்டிய இடம் Black town library)

தாகூர் என்ற பெயரை அறிந்திருந்த போதும் முதல் முதல் இப்போது தான் ‘அவரைப்’ படிக்கிறேன். அவரை மொழிபெயர்ப்பினூடாக உள்வாங்குகின்ற போது கவிதையின் ஆத்மா சேதமடையவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கவிதைகளை நுகரும் போது  தாகூரின் மொழிவீச்சு எத்தகைய பண்பைக் கொண்டிருந்திருக்கும் என்பதை உணர முடிகிறதெனினும்; தமிழ் மொழிக்கு  அப்படியே அதனை அதன் அத்தனை அழகும் கெடாமல் சொல்லக் கூடிய ஆற்றல் இருந்த போதும் ;அதை பெயர்த்தவருக்கு இன்னும் தமிழ் வசப்பட்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.




தாகூரின் மொழி நடை வள்ளலாரினதைப் போல; தேசியவிநாயகம் பிள்ளையினதைப் போல, மறைமலை அடிகளினதைப் போலானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மொழிபெயர்த்தவர் அத்தகைய மொழி அழகை பெயர்த்து வரவில்லை. அது எனக்கு பெரிய குறையாகவும்; கோபத்தைத் தருவதாகவும் இருந்தது. ஒரு மாபெரும் கவிஞனை; நோபல் பரிசு பெற்ற விற்பன்னனை; தன் மொழிக்கு அழைத்து வரும் போது அதற்கான தகுதியும் திறமையும் கொண்டு வருபவருக்கு இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்று அதைச் செய்யக் கூடாது. இரு மொழிகளிலும் ஆளுமையும், இலக்கிய அறிவும், மொழிப்புலமையும், தார்மீகப் பொறுப்பும், ஈடுபாடும் இருக்க வேண்டியதோடு அதில் திளைத்துத் திளைத்து தான் பெற்ற இன்பத்தை; அனுபவத்தை அதன் ஆத்ம சங்கீதத்திற்கு பழுது வரா வண்னம் தமிழைக் குழைத்து குழைத்து திருத்தி திருத்தி தமிழால் எழிலாக்கி அதைத் தரவேண்டும். அதற்கு அதைச் செய்பவருக்கு மேற்கூறியவற்றோடு ரசனை உணர்வு கொண்ட மனத் தகுதியும் வாய்க்க வேண்டும். இவைகள் மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள். வியாபாரம் ஆகி விட்டது சூழலும் வாழ்வும். நம் பாரதியை வேறொரு மொழி இப்படி சந்திக்கிழுத்துக் கொண்டு போனால் எமக்கு என்னமாய் கோபம் வரும்!வண்ணாத்துப் பூச்சியை கயிறுகட்டி யாரும் இழுத்து வருவதுண்டோ?

ஒரு இறகின் வருடலைப் போல; கழுவி விட்டுப் போன கடற்கரை மணலில் மெல்ல வந்து கால் நனைத்துப் போகும் கரையோர நீர் போல; அந்தக் கவிதைகளுக்கு இயல்புண்டு. சட்டென வந்து கரங்களில் குந்தி விட்டுப் போகும் வண்ணாத்துப் பூச்சியின் பாஷை அது! ஆனால் அது இயற்கையின் செல்லச் சீண்டல் அல்ல; மாறாக சிந்தனைக்குத் தரும் ஒரு தேன் துளி!அவைகள் கவிதைகள் அல்ல; பாடல்கள்! சங்கீதம்!!. மனதுக்கு இதம் தரும் ; சிந்தனையில் மெத்தெனப் படியும் ; ஆத்மாவை வருடும் பாடல்கள் அவை!

சரி அது நிற்க, மொழிபெயர்க்கப் பட்ட பாடலில் உள்ள ஆத்மாவை - கருவை எடுத்துக் கொண்டு எவ்வாறு இப்பெருங் கவிஞன் தாகூர் அதைத் தந்திருக்கக் கூடும் என்ற உணர்ந்து சில சொல் மாற்றங்கள் செய்து அதன் ஒரு கவிதையை பகிர ஆவல். (”கவிதையில் கதைகள்” என்று சொன்ன தலைப்பை ”கதைப் பாடல்கள்” என்று சொல்லலாம் என்பது போல) ஆனால் அதற்கு முன் திரு கிருஷ்ணமூர்த்தி கொணர்ந்த கவிதைப் பாடலை அப்படியே தருகிறேன்..

பழைய வேலைக்காரன்

பூதம் மாதிரி அவனுருவம், புத்தியிலும் மிக மட்டம்.
பொருளேதும் தொலைந்தால் வீட்டுக்காரி சொல்வாள்,
‘திருடன் கேஷ்டாவின் வேலை தான்.’
நானெப்போதும் திட்டிக் கொண்டிருப்பேன்
எதுவும் அவன் காதில் விழாது.
பணத்தை விட அதிகம் பிரம்படி பெறுவான்
அப்படியும் அவனுக்குப் புத்தி வராது
தேவைக்காக மீண்டும் அழைப்பேன்
கேஷ்டா, கேஷ்டா என்று கூவுவேன்
என் தொண்டை காய்ந்தாலும் வர மாட்டான்
ஊர் பூராவும் தேடுவேன் அவனை
மூன்று கொடுத்தால் ஒன்று தான் இருக்கும்
மீதி இரண்டும் எங்கே என்றறியான்
ஒன்றைக் கொடுத்தால் கண நேரத்தில்
மூன்றாய் உடைத்துக் கொண்டு வருவான்
எங்கே ஆனாலும் எவ் வேளையிலும்
உறக்கம் அவனுக்கு வரப் பிரசாதம்
கழுதை, முட்டாள், உதவாக்கரை
என்று நான் அவனை உரக்கத் திட்டினால்
கதவருகே நின்று கொண்டு சிரிப்பான்
அவனைப் பார்க்க எனக்கு எரிச்சல் மூளும்
எனினும் அவனை துறக்க மனமில்லை
மிகவும் பழைய சேவகன் கேஷ்டா.

வீட்டுக்காரி காளியாகிக் கத்துவாள்
இனிப்பொறுக்க முடியாது என்னால்
வீட்டில் நீங்களே இருந்து கொள்ளுங்கள்
கேஷ்டாவைக் கூட வைத்துக் கொண்டு
அவன் யாருக்கும் அடங்குவதில்லை
துணிமணி பாத்திரம் உணவுப் பொருள்கள்
போகுமிடம் தெரியவில்லை
பணம் மட்டும் போகிறது தண்ணீராய்
கடைக்கு அனுப்பினால்
நாள் முழுதும் ஆளைக் காணோம்
கேஷ்டாவைத் தவிர வேறொரு சேவகன்
கிடைக்க மாட்டானா முயற்சி செய்தால்?
கடுஞ்சினம் கொண்டு நானும் சென்று
அவன் குடுமியைப் பிடித்து இழுத்து வந்து
‘தடியா, உனக்கினி வேலை இல்லை
தொலைந்து போ உடனே’ என்பேன்
தயங்கித் தயங்கியவாறு போவான்
‘சனியன் ஒழிந்தது என்றே நினைப்பேன்.
மறுநாள் நான் கண் விழிக்கும் போது
கையில் ஹூக்காவுடன் முன்னே நிற்பான்
அவனது முகம் மலர்ந்தே இருக்கும்
வருத்தத்தின் நிழல் கூட இராது
விரட்டினாலும் போக மாட்டான்
என் பழைய வேலைக்காரன்

அந்த ஆண்டு சிறிது உபரிப்பணம் கிடைத்தது
நான் செய்து வந்த தரகுத் தொழிலில்
முடிவு செய்தேன் அப்பணத்தில்
பிருந்தாவனத்திற்கு யாத்திரை செய்ய
மனைவியும் கூட வர ஆசைப்பட்டாள்
நான் அவளுக்கு விளக்கிச் சொன்னேன்
அவள் வந்தால் அதிக செலவு
என் புண்ணியத்தில் பாதி அவளுக்கு
பயணத்திற்கான பொருள்கள் சேர்த்து
மூட்டை முடிச்சுகள் கட்டி வைத்து
கைவளையல்கள் ஒலிக்க
மனைவி சொன்னாள் அழுது கொண்டு
‘வெளியூரில் கேஷ்டாவோடு
நீங்கள் கஷ்டப்படுவீர்கள் மிகவும்’
ஐயோ கேஷ்டா வேண்டாம்
நிவாரண் வரட்டும் என்றேன்
ரயில் வண்டி விரைந்து சென்றது
வர்த்தமான் நிலையத்தில் பார்க்கிறேன்
கேஷ்டா அமைதியே உருவாக
ஹூக்கா எடுத்து வருகிறான் எனக்கு
அவனை எவ்வளவு கடிந்து கொண்டாலும்
பழைய சேவகனைக்கண்டு மகிழ்ச்சி தான் எனக்கு
பிருந்தாவனம் போய் இறங்கினேன்
வலமும் இடமும் முன்னும் பின்னும்
பண்டாக்கள் வந்து சூழ்ந்து கொண்டார்
தாங்க முடியாமல் தொந்தரவு செய்தார்
ஆறு ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து
ஒரு வீடு அமர்த்திக் கொண்டோம்
இனி சுகமாய் கழியும் போது
கவலை இல்லை என்று நினைத்தேன்

ஆனால், கோபிகை எங்கே, வனமாலை எங்கே?
வன மாலை அணிந்த கண்ணன் எங்கே?
எங்கே முடிவுற்ற வசந்த காலம்?
எனக்கு வைசூரி கண்டது
என் கூட்டாளிகள் எல்லோரும்
வீட்டில் இருந்து மறைந்தார் கனவு போல்
நான் தனியனாகி விட்டேன்
என் உடம்பெல்லாம் ரணமாயிற்று
மெலிந்த குரலில் இரவும் பகலும்
கேஷ்டாவை அருகழைத்து உரைத்தேன்
‘இவ்வளவு காலங்கழித்து
வெளியூர் வந்து சாகப் போகிறேன்’
அவனைப் பார்த்து என் நெஞ்சு நிறைந்தது
அவன் எனக்கொரு செல்வம் போல
இரவும் பகலும் என்னுடன் இருந்தான்
கேஷ்டா, என் பழைய சேவகன்

குடிக்க நீர் கொடுப்பான் குசலம் கேட்பான்
என் கையை எடுத்து தன் தலை மேல் வைப்பான்
அமைதியாய் நிற்பான் உறக்கமின்றி
உணவை முற்றும் ஒதுக்கி விட்டான்
அடிக்கடி சொல்வான், ’ஐயா
நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்
திரும்புவீர் நீங்கள் பத்திரமாக
எசமானி அம்மாளைப் பார்ப்பீர் திண்ணம்’

நான் நோய் தீர்ந்து எழுந்தேன்
காச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது
என்னை வருத்திய நோய் தன்னை
தானே ஏற்றுக் கொண்டான் போலும்!
இரண்டு நாள் நினைவின்றிக் கிடந்தான்
நாடி இறங்கத் தொடங்கி விட்டது
இது காறும் அவனை விரட்டி வந்தேன்
இப்போது அவனே விலகிக் கொண்டான்
பல நாள் பிறகு திரும்பினேன் வீடு
புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு
ஆனால் என்கூட இல்லை இன்று
என் நெடுநாள் தோழன், பழைய சேவகன்!
(புரதன் ப்ருத்ய)

பாரதியாரும் சேவகனைப் பாடியிருக்கிறார்.  எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ..... என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

அப்பாடலையும் இங்கு தரவே விருப்பம். ஆனால் அது மிக நீண்ட பாடல். பல வரிகளை நறுக்கி விட்டு சினிமாவில் அது வேறு விதமாய் ஒலிக்கும். அவசரப்படுபவர்கள் யூரியூப்பில் கேழுங்கள். முடிந்தவர்கள் பாரதி பாடல்களில் முழு வரிகளையும் முகருங்கள். வாசத்தில் திளையுங்கள்.

அவற்றை அனுபவம் செய்வீர்களாக!

அனுபவம் செய்தல் என்பது காணும் அனுபவத்தில் இருந்து வேறு பட்டது. உடல் சார்ந்த புலன்களின் இருந்து உயர்ந்து ஆத்மா அதை உணர்வது. அது கண் என்ற பாதையூடாக ஆத்மாவுக்குக் அவ் உணர்வை பணிவோடு ஏந்தி வந்து கொடுக்கும்.  இனி அது எங்கேயும் போகாது அங்கேயே ஒன்றாகி விடும். நிலையாக! உங்களோடு கூடவே வரும். எப்போதும்! அது பின்னர் உங்கள் அன்றாட வாழ்வில் பிரதி பலிக்க ஆரம்பிக்கும். தோற்றத்தைக் கூட சில வேளைகளில் மாற்றி அமைத்து விடும். கூடவே ஆத்மாவோடு பயணம் செய்யும் அது பிறவிகள் தோறும் பிறவிகள் தோறும் கூட ; கூட வரும்.....

இப்போது இரண்டு சேவகர்களினதும் ‘அழகு’ தெரிகிறதா? இரு  இனத்தினுடய துமான பண்பாட்டின் சாயல் இக்கவிதைகளில் புலப்படுகிறதா?

அறிய ஆவல்..... 

Sunday, September 11, 2016

பார்வைகள்....






பார்வைகள்....

ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் பார்க்கிற விதங்களில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கண்களில் தான் எத்தனை விதமான பார்வைகள்....

அண்மையில் ஒரு பொழுது போக்கு வணிக சஞ்சிகை ஒன்றில் (16.5.15 குங்குமம்) ஆல்தோட்ட பூபதியின் குட்டிச் சுவர் சிந்தனை இப்படிப் போயிருந்தது. ‘ கருணை அருளும் கடவுள்தான் என்றாலும் கையில் வேல் வைத்திருப்பது போல,வீட்டின் பாதுகாப்புக்குத் தான் கதவு என்றாலும் அதில் பூட்டுத் தொங்குவது போல, இடுப்பில் இறுக்கமாய் ஜீன்ஸ் இருந்தும் அதில் பெல்ட் இருப்பது போல, பள்ளிக் கூடப் பேருந்துகளில் கம்பி இருந்தும் அதற்கு வெளியே கம்பி வலை இருப்பதைப் போல, காவல் நிலையம் என்றாலும் கண்காணிப்புக் கமரா இருப்பதைப் போல, பிணக்கிடங்குக்கு முன் காவல் காக்கும் வாட்ச்மன் போல, சாவி போட்டுத் தான் ஸ்ராட் செய்ய முடியும் என்றாலும் சென்றல் லொக்கிங் இருப்பதைப் போல, கடவுள் படங்களுக்குக் கண்ணாடிச் சட்டம் இருப்பதைப் போல, புத்தி சாலி என்றாலும் படித்துப் பெற்ற பட்டம் போல, மருத்துவ மனைக்கு முன்னால் இருக்கும் பிள்ளையார் சிலை போல,அன்பு மட்டுமே மொழி என்றாலும் அவ்வப்போது வரும் அம்மாவின் அதட்டல் போல......

எப்பிடி எல்லாம் பாக்கிறாங்கப்பா.....

கடந்த வார நடுப்பகுதியில் என் வேலைத்தலத்து கம்போடிய நாட்டுச் சினேகிதி ஒருத்தி மிக ஆர்வமாக ஓடி வந்து தன் முகப்புத்தகத்தில் தான் ஒரு இந்தியரை இணைத்திருப்பதாகவும் அவர் போடும் இந்து சமயச் சுவாமிப்படங்கள் மிக அருமையாக இருக்கிறதென்றும் இந்தச் சுவாமிகளை எல்லாம் உனக்குத் தெரியுமா? இப் பெண் சுவாமிகள் எத்தனை அழகாய் இருக்கின்றன பார்த்தாயா என மிக ஆர்வமாகக் காட்டினாள்.

மிக அழகாய் தான் இருந்தன.

கூடவே அவள் காட்டிக் கொண்டு போன போது சிவலிங்க படங்களும் வந்தன. தம் அங்கோர்வாட் கோயிலில் இத்தகைய சிற்பங்கள்  இருப்பதாகவும் அவற்றை தாம் லிங்கா, யோனி என அழைப்பதாகவும் சொன்ன போது நாமும் அவ்வாறு அழைப்பதுண்டு என்றேன்.

உரையாடல் பின்னர் சொற்கள் பற்றியும் அது கூறும் கருத்துக்கள் பற்றியதுமாகத் திரும்பியது. அச் சிவலிங்க ‘புருஷ பிராகிருதி’ தத்துவம் பற்றி சொன்ன போது மிக ஆர்வமாகக் கேட்டு அதையே தான்  அங்கோர்வாட் கோயிலுக்குப் போன போது கைட்டும் சொன்னதாக மிக ஆச்சரியப் பட்டாள்.

பின்னர் அவ் உரையாடல் ஒரு புன்னகையோடு முடிவுக்கு வந்தது.

மறு நாள் என்னைக் கண்ட போது  கண்களில் ஆர்வம் கொப்பளிக்க ஓடோடி வந்து, இந்து சமயத்தின் சிவலிங்க வணக்க முறையையும் படத்தையும் அதன் தத்துவார்த்த விளக்கத்தையும் தன் அவுஸ்திரேலியக் காதலனுக்கு விளக்கிக் கூறியதாகவும் அவர் மிக ஆச்சரியப் பட்டுப் போனதாகவும்கூறி, ‘இது நல்ல மொடேர்னான சமயமாய் இருக்கும் போலிருக்கு’ என்று சொன்னதாகவும் சொல்லி போனாள். சிற்றின்பமே வாழ்வின் உன்னத இலட்சியமாய் இருப்போருக்கு அது மேலான சமயமாய் இருப்பதில் வியப்பேது?

பார்க்கிற பார்வைகள்......

இந்தச் சம்பாசனையை என் இலக்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இப்படிச் சொன்னார். அவர் தான் குடும்பத்தோடு நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த இஸ்லாமியக் குடும்பத்தவர் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் இருக்கும் தலத்தின் முற்றலில் அதன் காரண விபரணங்களை அக்கறையோடு கேட்டு விட்டு ‘இவரும் நம்மளப் போல நம்ம சமயம் சொல்லுறதத் தான் செய்யிறாரு’ என்றாராம்.

பார்க்கிற பார்வைகள்......

கூடவே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயங்கள் சம்பந்தமான உரையாடலின் போது என்னை ‘உலகத்தின் மிகப் பழைமையான சமயம் (இந்து சமயம்) எனதென்றும்; இவர்கள் குரங்கு, (ஆஞ்சநேயர்) மாடு, யானை இவைகளை எல்லாம் இன்றும் வழிபடுகிறார்கள் என்று அறிமுகப் படுத்தியமையும் நினைவுக்கு வந்தது.

பார்க்கிற பார்வைகள்.....