Monday, May 19, 2014

இழப்புகள்

குழந்தைகளற்ற வீட்டின்
நிசப்தங்களிடையே
காதுக்கெட்டாத விசும்பல்களாய்
முனகிக் கொண்டிருக்கிறது
அவன் முகப்புத்தகம்.

அவன் கடசியாய் பகிர்ந்த
நிலைத்தகவலை விடவும்
முந்திவிட்டது
அவன் நிலையைப் பற்றிய தகவல்.

இறப்பு அறியாமல்
இன்னமும் அனுப்பிக் கொண்டிருக்கிரார்கள்
நட்பின் அழைப்பிதழும்
பிறந்தநாள் வாழ்த்தும்.

இறந்து போன செய்தியினை
அவன் சுவற்றில் பதிய முடியாமல்
தடுத்துக் கொண்டேயிருக்கிறது
அவன் குழந்தையுடன்
சிரித்துக் கொண்டிருக்கும் கடைசிப் புகைப்படம்.

இறந்து போனவன் எனக்கு
இறந்து போனதாகவே நினைவில் இல்லை.
நீண்ட நாட்களாக
முகநூல் அற்ரிருக்கிறான்.

அவன் புதைக்கப்பட்ட
கபர்ஸ்தான் அருகே
அந்தக் கருவேல மரத்தினின்று
களன்று விழுந்த இலைகள் தான்
அவன் பகிரவே முடியாத நிகழ்வுக்கு
அவன் பார்க்கவே முடியாத
கடைசி லைக்.

ரசிகவ் ஞானியார் ஆனந்த விகடன் 2.4.14. பக்: 28.

இந்தக் கவிதையைப் பார்த்த போது ’கருவேலநிழல்’ என்ற வலைப்பூ என என் நினைவில் இடறிச் சென்றது.பாரா என்ற பெயர் கொண்ட பா.ராஜாராம் என்பவரின் வலைப்பூ அது. அவரது குட்டிக் குட்டிக் கவிதைகளும் சுவாரிசமான பதிவுகளும் அம்மனிதனை என் மனதுக்கு மிக நெருக்கத்தில் அமர்த்தி இருந்தன.

கால ஓட்டத்தில் அப்பதிவுகளின் பக்கம் போவது குறைந்து போய் விட்டது. இக் கவிதையை ஆனந்த விகடனில் பார்த்த பின் அப்பக்கம் போனேன்.2013 மார்ச் 8க்குப் பின் பதிவுகள் ஏதுமில்லை.

என்னாச்சுப்பா?

பாராவின் கருவேலநிழலில் இருந்த எனக்குப் பிடித்த கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தெரிந்தவர்கள் என்னவாயிறென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

துக்கமாயிருக்கிறது.

மனதுக்கு நெருக்கமான ஒன்றை இழப்பது துயர் மிக்கது.




அம்மா விரலைப் பிடித்தபடி
நடந்து போய்க்கொண்டிருந்த
சிறுவனைப் பார்த்து
சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருக்கிறான்.

திருப்பித் திருப்பி
சிரிக்க வேண்டியிருக்கிறது!

.......................

என்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

அவளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

எல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'

.........................................

கோயம்பத்தூர்
08-10-2010
9.35 pm

அவசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்.

ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித் திண்ணையில்
காலணி இடும் இடத்தில்

நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்.

மறந்த மயிலிறகின் பீலியைப் போல்
கிடைக்கிறாதாவென பாருங்கள்.

கிடைக்காது போகிறபோது
மட்டுமே இறைஞ்சுகிறேன்.

என் பிரியமானவர்களே
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை.

- நன்றி.. பா.ராஜாராம்.

.......................................

தட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென
முதலில் அறிந்தேன்.

தட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.

போறான் பாரு,
வாலில் நூல் கட்டிய பொறம் போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை.

பொறம் போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப் படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி.

.............................................

சாண வரட்டி
தட்டிக் கொண்டிருந்தாள்
சகுந்தலா சித்தி.

வீட்ல அடையாக்கும் என
விசாரித்தபடி போய்க் கொண்டிருந்தார்
பெருமாள் சித்தப்பா.

ஆமா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே
என சிரித்த சகுந்தலா சித்தி
அவ்வளவு அழகு.

அதைவிட அழகு,
அத்தருணத்தில் மணிக்கட்டினால்
சித்தி முடி ஒதுக்கியது.

......................................

சிகரெட் பிடிக்கிற காசிற்கு
வாழைப் பழம் வாங்கி தின்னேண்டா
என்பாள் அம்மா.

சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.

கொல்லையில்,
வாழை மரங்கள் வைத்த
வீடொன்றை நினைக்க
நல்லாத்தான் இருக்கிறது...

புகைக்கிற போதெல்லாம்.
................................
உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

பதில் இல்லை.

.........................................

பக் பக் பக் என அழைத்தால்
தானியம் தரவென அறிகிறது
பெயரில்லா கோழி.

உதடு குவித்து ப்ரூச் என்றால்
புரியும் ரோசிப் பூனைக்கு.

கெத் கெத் கெத் என
மேல் அன்னத்தில் தட்டினால்
வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.

...............................................

அம்மா சத்தியமாய்
என்று தொடங்கியது பிறகு
ஐயப்பன் சத்தியமாய் என்று
மாறியிருக்கிறது.

குலசாமி பொதுவா என்று
சொல்ல நேர்ந்ததும் உண்டு.

பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.

அப்பவும், இப்பவும்
எங்கு தவறு நேர்கிறது என
அறிய இயலவில்லையே ஆஞ்சனேயா?

"ஆஞ்சனேயா?"

"ஆஞ்சி?"

எஸ்கேப் போல.

..................................

மழெ இல்லே தண்ணி இல்லே
ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே
அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

-- ராஜசுந்தரராஜன்
.................................................

சனியனே,
விருந்து சொல்ல
உனக்கு வேறு வீடா கிடைக்கலை?"
என இரைந்து கொண்டிருந்தாள்
வெஞ்சனத்துக்கு
முருங்கை ஒடித்துக் கொண்டிருந்தவள்.

"பார்த்துடி,
முட்டை இருக்கு"
என கரைந்து கொண்டிருந்தது
ஓட்டுத்தாவர காகம்.

........................................

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.
..............................................

சேவுக மூர்த்தி என்ற
'குண்டக்க மண்டக்க' மூர்த்தியை
தேடிப் போயிருந்தேன்.

பூட்டியிருந்தது வீடு.

ஒட்டிய சந்திலிருந்து
ஓடி வந்த சிறுவனொருவன்
மூர்த்தியை ஒத்திருந்தான்.

மூர்த்தி மகனாடா என்றேன்.

இல்ல...
வந்து...
அது வந்து...
என்றெல்லாம் இழுத்தவன்
மூர்த்தி எங்கப்பா என்று
ஓடிப் போனான்.

மேற்கொண்டு
மூர்த்தியையும் வேறு பார்கனுமாவென
திரும்பினேன்.

.....................................................

அட்டையின் கவிதை...

நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.

உள்ளே..

நீ நடந்த தடங்களின் அடியில் தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு!

ஜன்னல் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தாள்
காலைக் கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணிச் சத்தத்தை!

கொஞ்சூண்டு தான் இருந்தாள்
யாருக்கும் தர முடியாத
காதலாக இருந்தாள்!

காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.
......................................

அவளை கண்டு பிடிக்க
எந்த முயற்சியும்
செய்தேன் இல்லை.

அவளும் வழி அறிவிக்கிற
ரொட்டித் துண்டுகளை
பிய்த்து எறிந்தவள் இல்லை.

ஆயினும்,
இந்த தெருக்கள்
எங்களை
காட்டித் தராமல் இல்லை.
..........................................

தவளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?

நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?

சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?

கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?

பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?

ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...

ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?

.................................................

எல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.

.......................................

என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.
.............................................

பர்ஸ் எடுத்து
வைத்து கொண்டாள்.

மொத்த சேலைகளையும்
கூடைப்பையில் திணித்து கொண்டாள்.

பாவாடை பிரிலை
அவசரமாக உள் நுழைத்தாள்.

குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.

விளக்கு பொருத்தி
சாமி பார்த்தாள்.

கண்ணீர் பெருக்கெடுத்தது.

கதவு பூட்டி
சாவி எடுத்தாள்.

அவன் வந்து கொண்டிருந்தான்.

வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.

திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.

...................................................

நீங்கள் அணிந்திருக்கிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

மயிர்க்கால் அளவு
கூடிப்போகும்.
சிலநேரம் குறையலாம்.

அளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்

கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென.

பெரிய மனசு கொண்டவரே..

இல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.

பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.
...........................................................

புருஷன் பொண்டாட்டி
சண்டை போல.
பெரிய கூக்குரல்.

குழந்தை குட்டிகளின்
அலறல் வேறு.

"இதே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு"
என இவளும் சலிக்கிறாள்.

படிப்பதை நிறுத்திவிட்டு
முகம் பார்க்கிற என்
குழந்தைகளின் முகத்திலும்
சொல்லொண்ணா கலவரம்.

இனி,
அப்பாவாக வேணும் நான்.

எழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன்.

மூச்சுப்பறியக்காணோம்
குருவிக்கூண்டில்.

.......................................................

பொட்டு சரியாவென 
கேட்க்கிறாள் 
புறப்படும் அவசரத்திலும்.. 
காசு தந்து 
கலைத்தவனிடம். 
...........................................

நடுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

....................................

"என்ன நினைச்சுக்கிட்டு
இருக்க?"
என கோபமாகக்கூட
கேட்டுப் பார்க்கிறேன்.
சிரிச்சுக்கிட்டேதான்
நிற்கிறான்.

இந்த சிரிப்பு
எதுல போய்
முடியுமோ
என
பயமாகவும் இருக்கு.

"பயமாகவும் இருக்கு"
என
வாயசைத்து
சிரிக்கிறான்.

முதுகில்
ரசம் பூசிய
பேசத்தெரியாத
சிரிச்ச பயல்.

..............................................

ஒன்று:
அழைத்து போக
வந்தார்கள்.
ஆடிக்கு.

அழுதாள்
இவள்.

அழுது கொண்டே
இருப்பவளின்
ஆகச்சிறந்த அழுகை
அது.

இரண்டு:
ஓட்டிடை
எட்டிப்பார்த்து
கீச் கீச் என்கிறது
அணில் குட்டி.

" நீ வேறையா?.."
என்றாள் இவள்.
என் மேல் உள்ள
எரிச்சலில்.

தருணம்
தளர்த்தித்தந்தாள்
அணில் குட்டி.

மூன்று:
"திறந்து
கிடக்கு முண்டம்"
என மூடிக்கொண்டாள்
இவள்.

கதவு மூட
எழுகிறேன்
கனவு கலைகிறது.

.......................................


ஆற்றங்கரையில்
எடுத்த கல்.

மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில் 
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.

அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ஆளோட பேரோட
இருந்திருக்கும்.

..........................................

உடைத்தாய்.
செப்பனிட்டாய்.
செப்பனிட தெரிந்ததால்
உடைத்து விடுவாய்.
செப்பனிட விரும்பியும்
உடைக்க தொடங்குவாய்.
செப்பனிட்டு செப்பனிட்டு
உடைந்து விடுவாய்.
...........................................

எனக்கு இணையாக உனக்கு
யார் பிடித்திருந்தாலும்
அவர்களுக்கு தரும் புன்னகையில்
சின்னதாய் ஒரு வலி
இருக்குமானால்
அந்த வலியில்
உயிர்க்கும்
என் காதல்

.......................................

எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்யதைபட்ட
செவி ஒன்று
இருக்குதானே!
..................................

காதலுக்கு
அர்த்தம் கேட்டார்
கடவுள்.
என்னை காட்டினேன்.
காரணம் கேட்டார்
உன்னை காட்டினேன்.

நீ அழகாய்
இருக்கிற ரகசியம்
கண்கள்ள்ள்ள்ள்...
சம்பந்தபட்டதன்று
வெறும்
கண்கள்
சம்பந்தப்பட்டது.

ஆழ்ந்து சுவாசி
உணர முடியும்
முற்பிறவியில்
நீ வாழை மரம்.
நான் பக்ககன்று.

நீ விரும்பி
விளையாடும் பொம்மை
என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என்னை.

மனைவி குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வேன்.
கணவன் குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வாய்
சொல்...
பாவமில்லையா
இது மட்டும்?...

நீ நடந்த
தடங்களின்
அடியில்தான்
கிடக்கிறது
நம் மணல்.
மணல் என்றால் மணல்.
மனசென்றால் மனசு.

என் தூக்கத்தை
திறக்கும் சாவியும்
திறக்காத சாமர்த்தியமும்
உன்னிடமிருந்தது.

காலாகாலத்திற்கும்
சொல்லி சிரிக்கும்தானே
ஆமையின் தூக்கமின்மையை
முயல்கள்.

கும்மிருட்டின் மின்மினி
ஓவியம் நீ.
தூக்கணாங்கூட்டின்
குஞ்சு பறவை நான்.
இணைக்காது போனதேடி
இயற்கை.

உன்னை தேடி அடைய
எனக்கு பிடிக்கிறது.
என்னை தொலைத்து விளையாட
உனக்கு பிடிக்கிறது.

ஆட்களற்ற திருவிழாவில்
தொலைத்தாய் என்னை
அழுது புலம்புவது
தொலைந்தற்க்கன்று
நீ தேட மறந்தது கண்டு.

உனை போன்றே
செய் நேர்த்தியாக
இருந்தது.
என் நெஞ்சு குழியில்
நீ பாய்ச்சிய
நெளி கத்தியின்
கூர்மை.

உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.

உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.

கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.

...................................................




.