Saturday, December 28, 2013

படலைகளும் புகைக்கூடுகளும்; நாடோடியின் கண்ணூடே.......


மாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.

கால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்  சங்கடங்களை  தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும்  வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.

 (படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)











இவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.







கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.



தண்ணீர் பந்தல் 

கூடவே தண்ணீர் தொட்டியும்  மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல் கல் - கல்) அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.




ஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்

ஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.

இந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்






ஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....


ஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.

இப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது. 

என் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.

நடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.

அண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.

இரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம். 

இப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது. 

இவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)

1. சங்கடப்படலை போன்ற அமைப்பு







படலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.

புகைக்கூடுகள்: அங்கும் இங்கும்

நம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு. 

அங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது. 

அது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.






இவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.



வெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்




இவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.



என்னிடம் இப்போது வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள்! அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக!

     அன்பே சிவம் !

Tuesday, December 3, 2013

என் வீட்டு றோட்டோரம்







நத்தார் கொண்டாட்டத்துக்கு தயாராகி நிற்கும் வீடொன்று. 1.12.13 இராக்காலம்.