Thursday, April 25, 2013

தாய் Land - 2 -

நாம் இப்போது பாங்கொக்கில் (Bangkok) சுக்கும்விற் (Sukhumvit) என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.Soi 13 என்பது அந்த உள்வீதியின் பெயர்.



இந்த நாட்டு நாணயத்தை Bhut பட் என அழைக்கிறார்கள்.ஒரு அவுஸ்திரேலிய டொலர் 28 - 30 பட்டுக்குள் அமைந்திருக்கின்றன. சர்வதேச நாணயங்களை அந்த ஹொட்டலிலேயே மாற்ற முடிகிறது. ஹொட்டேலின் பிரதான வாசல் கதவைத் திறக்கின்ற இருவர் பாரம்பரிய ஆடை அணிந்து நெஞ்சருகில் இரு கரங்களியும் கூப்பி தலை குனிந்து வணங்கி வரவேற்புத்தர; மற்றுமிருவர் பயணப்பொதிகளை எடுத்துச் செல்ல; நாம் வரவினைப் பதிவு செய்து, எட்டாம் மாடிக்கு லிவ்ட்டில் செல்வதற்கான காட்டையும்  பெற்றுக் கொண்டு  உள் நுழைந்தோம்.

அது ஒரு அழகிய சிறு suite.தொலைக்காட்சி, பக்க விளக்குகளோடு கூடிய படுக்கையறை, தொலைக்காட்சியோடு கூடிய சிறு வரவேற்பறை, இருந்து இளைப்பாறத்க்கத்தக்க மேசைகதிரை, மேசை விளக்கு சகிதம் சிறு கொப்பி பேனா மேசை, சர்வ தேசங்களுக்கும் எடுக்கக் கூடிய வசதியோடு தொலைபேசி, மற்றும் குளியலறை, சிறுதேனீர் போடத்தக்க வசதிகளுடன் கூடிய சிறு குசினி, குளிபானங்கள் நிரப்பப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, தண்ணீர் போத்தல்கள், இருந்து சாப்பிடும் மேசைகதிரை , பெறுமதியான பொருட்களை வைப்பதற்கான லொக்கர், ஒரு பக்கம் முழுவதுமான பார்க்கும் கண்ணாடி, மற்றும் தலையுலர்த்தி,அயர்ன் செய்வதற்கான வசதிகள்,ஆடைகளைக் கொழுவி வைப்பதற்கான அலுமாரி,நைட் கவுன்கள், செருப்புகள், துவாய்கள், கிறீம்கள், ஷப்பூ, சோப் என எல்லாம் அழகிய சுத்தமும் நேர்த்தியுமான வகையில் வைக்கப்பட்ட ஒரு suite. சிறு குடித்தன அறை.

அறையை விட்டு வெளியே வருகின்ற போது ஒரு சன்னமான மெல்லிய இசை கேட்டுக் கொண்டிருக்கிறது. மென்மையான வாசம் எங்கிருந்தோ வந்து அந்த இடத்தை நறுமணம் கமழ வைக்கிறது. வாசல் கதவுகளுக்குத் திறப்புகள் இல்லை. ஒரு (தந்த) அட்டையை வாசலருகில் காட்டினால் அது திறந்து கொள்கிறது. லிப்ட் உபயோகிக்கும் போதும் அதனைத் தான் பாவிக்க வேண்டும். அறைக்குள் வந்ததும் அந்த அட்டையை அதற்குரிய இடத்தில் சொருகியதும் அறை வெளிச்சம் பெறுகிறது. விட்ட தொலைக்காட்சி விட்ட இடத்தில் இருந்து  உயிர் பெறுகிறது.

















இங்கிருக்கின்ற ஓட்டோ மாதிரியான ஒரு வாகனத்தை (கீழே உள்ளது) ”ருக்ருக்” என அழைக்கிறார்கள். நாம் பதிவு செய்திருந்த ஹொட்டேல் சிப்பந்திகள் (Radisson) இதன் மூலம் பயணிகளை சுற்றுப்புறங்களுக்கு இலவசமாகக் கொண்டு சென்று இறக்குகிறார்கள். பிறகு குறிப்பிட்ட நேரத்துக்குச் சொல்லும் இடத்துக்கு வரச் சொன்னால் வந்து இலவசமாகவே ஏற்றிக் கொண்டு வந்தும் சேர்க்கிறார்கள். முன் புறம் வந்து குறிப்பிட்ட ஓரிடத்துக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ருக் ருக் வந்து உங்களை ஏற்றிச் செல்லும். தூர இடங்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் அவர்களிடம் சொன்னால் அவர்கள் ரக்‌ஷிக்கு ஏற்பாடு செய்வார்கள். சுமார் 2 - 3 நிமிடத்தில் நீங்கள் கோரிய ரக்‌ஷி உங்கள் இடத்துக்கு வந்து நிற்க கொடுக்க வேண்டிய பெறுமதியையும் அவர்களே பேசி நமக்கு வாடகைக் காரைப் பெற்றுத் தருகிறார்கள்.

கதவு திறந்து நம்மை அனுப்பவும், கதவு திறந்து நம்மை வரவேற்கவும் அவர்கள் ஒரு பொழுதிலும் மறந்ததில்லை. புன்னகை பூத்த முகங்கள்! அதிர்ந்து பேசாத குரல்கள்!!, கேட்டால் மட்டும் அறிவுரை தரும் இதம்!!!, உதவி செய்கின்ற மனங்கள்!!! மேடம், மேடம் என்று கூப்புடுகின்ற பாங்கு எல்லாம் அபாரம்! ஒரு வித ஓசை நயம் மிக்க பேச்சுப் பாணி அவர்களது.

ஒரு ஓரமாக ஒரு அழகிய பெண் உட்கார்ந்திருக்கிறார். அவர்களிடம் இருந்தும் உல்லாசப்பயணங்களுக்கான இட விபரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். பஸ்கள் நாளாந்தம் பயணிகளை ஏற்றியவாறு புறப்படுகிறது. விரும்பினால் அவர்களிடம் இருக்கின்ற பயண அனுபவங்களையும் நாம் சற்றே ருசி பார்க்கலாம். அதற்கான தகவல்களை அவர் விபரமாகத் தருகிறார். இவர்கள் எல்லோரும் தரமான ஆங்கிலம் பேசுகிறார்கள். 




நாங்கள் மறு நாள் காலை பிளட்டினம் என்ற ஷொப்பிங் சென்ரருக்கு போவதாகத் திட்டமிட்டிருந்தோம். காரணம் அடுத்து வரும் மூன்று நாட்களும் கடைகள் யாவும் பூட்டப்பட்டிருக்கும் என்பது தான்.


நல்லதொரு தூக்கத்தின் முன் இரவு நேரச் சாப்பாட்டுக்காகவும் சுற்று வட்டாரத்தைப் பார்ப்பதற்காகவும் குளித்து தேநீர் போட்டுக் குடித்து விட்டு வெளியே புறப்பட்டோம். 

வெளியே மழைக்கோலம்.


தொடரும்..............











4 comments:

  1. ஆனால் இந்தக் கட்டிடம் அமைந்திருக்கின்ற வீதி அத்தனை சுத்தம் இல்லை தனபாலரே!

    கால்வாய் வசதிகள் படு மோசம்.அது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. தாய்லாந்து செல்லவிரும்புவோருக்குப் பயன்படும்படியான நுட்ப தகவல்கள். தங்குமிடவசதி நன்றாக உள்ளது. படங்களுக்கும் தகவல் உபயத்துக்கும் நன்றி. போக்குவரத்துப் பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதை ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்கிறது என்பது நிம்மதியான விஷயம். மொழிப்பிரச்சனையும் இல்லை என்று உங்கள் பதிவின்மூலம் தெரிகிறது. நல்லது மணிமேகலா. தொடருங்கள். தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
  3. நான் கண்டதை பார்த்ததை பகிர்கிற முயற்சி தான் இதும்மா.

    ஹொட்டேலுக்கு வெளியே மொழிப்பிரச்சினை இருக்கவே செய்கிறது.என்றாலும் அவர்கள் மேடம், மேடம் என்று அழைக்கின்ற அந்தத் வாஞ்சைமிக்க தொனியில் எல்லாம் மறந்து போகிறது.

    மென்மையான மனமும் தோற்றமும் கொண்ட அப்பாவி மக்கள்!

    நன்றி கீதா. வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete