Sunday, March 6, 2011

கள்ளூறும் பொய்கை


அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் அற்ககோல் தொழில்நுட்பம் பயின்ற இரசாயணத்துறையில் முதுகலைமானிப் பட்டம் பெற்ற பங்கஜ் என்பவர் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கின்ற மலைப்புறங்களில் விளைகின்ற வாழைப்பழத்தில் இருந்து வைன் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருப்பதாக ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.மலைப் புறங்களில் செழிப்பாக வளர்கின்ற அந்தக் குறிப்பிட்ட வாழைப்பழங்களுக்கு இனிமையும் சுவையும் அதிகமாகக் காணப்படுவது தான் அதற்குக் காரணமாம்.

அவுஸ்திரேலியாவும் வைன் தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.விருந்துக்கு யார் வீட்டுக்காவது செல்வதாக இருந்தால் அல்லது உணவு விடுதிகளுக்கு இரவு விருந்தொன்றுக்குச் செல்வதாக இருந்தால் வைன் போத்தல்களோடு அவர்கள் செல்வார்கள்.

வைன் உற்பத்தி செய்கின்ற பிராந்தியத்துக்கு ஒரு முறை நானும் சென்றிருந்தேன்.கண்னுக்கெட்டிய தூரம் வரை திராட்சைத் தோட்டங்களும் பல நூற்றுக் கணக்கான வகைகளில் திராட்சை ரசங்கள் ருசி பார்ப்பதற்காகவும் வைக்கப் பட்டிருக்கும்.நாம் அருந்திப் பார்த்து விருப்பமானதைத் தெரிவு செய்யலாம்.

அவர்கள் போத்தலைப் பிடிக்கும் விதம், அதனை கண்ணாடிக் குடுவைக்குள் ஊற்றும் போது ஊற்றுவதில் அவர்கள் காட்டும் பக்குவம், என்று எல்லாவற்றிலும் ஒரு பக்குவம் இருக்கும்.அந்தக் குறிப்பிட்ட வைனைப் பற்றி அதன் தோற்ற வரலாறு குண இயல்புகளை வர்ணிக்கும் போது பார்த்தால், யாரோ ஒரு பாசமுள்ள பெற்றோர் தன் ஒரே மகளைத் திருமணம் பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கு முன் மகளின் இனிய குண இயல்புகளைப் பேசுவது போலவோ; அல்லது குண்டுமணியைத் அல்லது மஞ்சாடியை தராசின் ஒரு பக்கம் போட்டு மறு பக்கத்தில் தங்கத்தை நிறுப்பது போலவோ ஒரு பொறுப்பான பக்குவமும் உன்னிப்பான பார்வையும் இருக்கும்.

வாங்குபவர்களும் ஏதோ யாரோ ஒருவரின் மகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை இறக்கும் தறுவாயில் இருக்கும் தன் ஆத்ம நண்பனுக்கு எப்படியாவது சொல்லி வழியனுப்பி விட வேண்டும் என்ற கணக்காக அதனை வெகு அக்கறையோடு கேட்டுக் கொண்டிருப்பார்.

தொலைக் காட்சியில் வைன் எப்படிப் பருக வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பார்கள்.குவளையை எப்படிப் பிடிக்க வேண்டும்,வைனை அதற்குள் ஊற்றிய பின் அதனை 2,3 தரம் சுளாவுவது எப்படி? உதட்டில் குவளையை பொருத்தி ஒரு மிகச் சிறு மிடறினை எவ்வாறு உட்கொள்வது? பிறகு எப்படி மெல்லியதாகச் சத்தமற்று சப்புக் கொட்டி ருசியை அதன் தரத்தை,அதன் குணத்தை உணர்வது என்றெல்லாம் மிக அக்கறையாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

அது முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்ட உலகம். பரீட்சயமில்லாத தனி உலகம்.ஆனாலும் டெசேட் வைன் என்று ஒரு சிவப்பு நிற வைனை வாங்கி வந்தேன். அதனை ருசி பார்த்த போது என் மிகச் சிறு வயதில் வயிற்று உபாதைகளுக்கு அம்மா தரும் கிறேப் வோட்டர் என்ற சுவையும் வாசமும் மிக்க மருந்தை அது நினைவூட்டியது தான் அதனை நான் வாங்குவதற்கான பிரதான காரணம்.(வயிற்று வலி உபாதைகள் இல்லாத போதும் வயிற்றை வலிக்கின்றது என்று சொல்லி அதனை வாங்கிக் குடித்தது இப்போதும் நல்ல ஞாபகம். அம்மருந்து இப்போதும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் அதன் வாசமும் சுவையும் மிக இனிமை.)ஆனாலும் இக் கணம் வரை - மூன்று வருடங்களுக்கும் மேலாக அது பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் வருட முடிவில் வீட்டை மீண்டுமொரு முறைக்கு ஒழுங்காக்கும் போது கைக்கு அது அகப்படும்.அவுஸ்திரேலியர்களைப் போலவே மிகப் பக்குவமாக அதை உருட்டி உருட்டிப் பார்ப்பேன். அதில் எந்த ஒரு விஷேஷமும் எனக்குத் தென் படுவதில்லை. அது என்னைப் பொறுத்தவரை வெறும் போத்தலாகவே இருக்கிறது.தூசினை நல்லதொரு துணியினால் துடைத்து விட்டு அவர்கள் வைத்துத் தந்த அதற்கென விஷேஷமாகத் தயாரிக்கப் பட்டிருந்த பளபளப்பான உயரமான கறுப்பும் தங்க நிற எழுத்துக்களும் கலந்த பையினுள் வைத்து அது தன் இருப்பிடத்தில் மீண்டும் அமர்ந்து கொள்ளும்.ஆனால் மீண்டும் ஒருமுறை ஹன்ரர் என்ற இடத்துக்குப் போன அந்த பசுமையான நினைவுகளை மட்டும் அந்த வைன் போத்தல் எனக்குத் தந்திருக்கும்.

இந்தத் திராட்சைக் கள்ளை திருமணமாகாத இளம் ’கன்னிப்’ பெண்களை திராட்சைப் பழங்கள் இருக்கின்ற பள்ளத்துக்குள் இறக்கிவிட்டு விட்டு அருகில் நின்று இனிமையான வயலின் இசையை மீட்டுவார்களாம். அந்த இசைக்குத் தகுந்த படி அக் கன்னிப் பெண்கள் நடனமாடிய படி திராட்சைப் பழங்களை உளக்கி ரசமாக்குவார்களாம். பிறகு அதனைப் பதப்படுத்தி குடுவைகளில் இட்டு மண்ணுக்குள் புதைத்து விடுவார்களாம். பின்னர் பல வருடங்களின் பின்னால் எடுத்து பருகுவார்களாம்.இதுவும் திராட்சை ரசம் பற்றிய ஒரு செய்தி!

இவை எல்லாம் ஒன்றோடொன்றாக நினைவுக்கு வந்ததற்குக் காரணம் அண்மையில் காணக்கிட்டிய இந்திய வாழைப்பழ வைன் பற்றிய செய்தி தான்.இதனை அறிந்த போது சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது.இது ஒரு ’கள்குளம்’பற்றியது.முழுக்க முழுக்க இயற்கையே அதனை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அத்தனை வளங் கொழித்த ஒரு மலைப்புறத்து பாடல் இது. அந்த மலை நாட்டின் வளத்தைக் கூறும் ஒரு பாடல்.

பங்கஜ் பார்த்த அதே வாழைப்பழம்; அதே மலைப்புறம்;பொய்கையோரம் செழித்து வளர்ந்துள்ளன வாழை மரங்கள்.இங்கே அழகிய கன்னிப் பெண்கள் பழங்களை உழக்கவில்லை; இப்போதையைப் போல் இசை அங்கே ஒலிக்கவில்லை.தாட்டு வைத்துக் காத்திருக்கவில்லை.இன்ஸ்டன் கள்ளு!அதனை இயற்கை எவ்வாறு செய்து விடுகின்றது என்று பாருங்கள்.

தன் பழக் குலைகளில் இருந்து தானாக முற்றிப் பழுத்துக் கொட்டுகின்றன வாழைப்பழங்கள் பொய்கைக்குள். அது போலவே தீங்கனிச் சாறாக முற்றி பழுத்துக் கொட்டுண்ட பலாச்சுளைகளின் இனிய சாறும் பொய்கை நீருள் கலக்கின்றது. இந்தக் கலவையை இயற்கையாகவே சூரிய பகவான் சூடாக்குவதால் அவை நொதித்து ‘ஊழ்படு தேறல்’என்ற கள் ஆகிறது.இவ்வாறு இயற்கையாகவே கள் ஊறுகின்ற சுணை நீரில் தாகத்துக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது குரங்கு.இல்லை இல்லை. தண்ணீர் என்று நினைத்து கள்ளினை உண்டு விடுகின்றது. அதனால் போதை மிக்க மயக்கம் அதற்கு. அதன் நிமித்தமாக மிளகுக் கொடிகள் படர்ந்துயர்ந்திருக்கின்ற சந்தன மரத்தில் ஏற முடியாமல் கள்ளின் போதையில் அக்குரங்குகள் மலர்கள் கொட்டிக் கிடக்கும் மலர் தரையில் மயங்கிக் கிடக்கின்ற மலை நாடே! என்கிறார் கபிலர் என்ற இவ் அகநானூற்றுப் புலவர். இப்பாடல் அகநானூறில் 2வதாக அமைந்திருக்கின்றது.

அந்தப் பாடல் இது தான்.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊளுறு தீங்கனி உண்ணுநர் தடுத்த
சாரற்பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடுஞ் சுணை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாடே”.

வாழைப்பழமும் மலை நாடும் இந்தியாவும் முன்னரே இயற்கையாகக் கண்டு பிடித்த ’ஊழ்படு தேறலைத்’ தானோ இப்போது பல நூற்றாண்டுகள் கழித்து பங்கஜ் கண்டுபிடித்திருக்கின்றார்?

No comments:

Post a Comment