Thursday, October 28, 2010

யாதும் ஊரே.....


தமிழ் இலக்கியத்தில் மிகப் பிரபலமான பாடல் ஒன்றிருக்கிறது.உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான் அது. முக்காலத்திலும் பிரபலமாயிருக்கத் தகுதி வாய்ந்தது.தமிழனின் பண்பையும் பரந்த மனப்பாண்மையையும் சொல்லி நிற்கும் அற்புதமான வரிகள் செறிந்தது. இலக்கியப் பழைமையையும் பண்பாட்டுத் திறத்தையும் ஒருங்கே சொல்லி நிற்கும் அழகு வாய்ந்தது. தமிழினம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்க; சொல்லி நிற்க;பெருமை கொள்ள ஏற்ற பாடல்.

அது கணியன் பூங்குன்றனாரின்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
சாதலும் தணிதலும்,அவரன்றோ ரன்ன,
சாதலும் புதுவ(து) அன்றே வாழ்தல்
இனிதன மகிழ்ந்தன்றும் இலமே,முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே மின்னோடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொரு(து) இரங்கும்,மல்லல்ப் பேர்யாற்று,
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில்த் தெளிந்தனம்,ஆகலின் மாட்சியில்,
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.

என்ற பாடல் தான். எல்லாம் நம்முடய ஊர் தான். எல்லோரும் நம் உறவினரே.(கேளிர் - உறவினர்)நன்றும் தீதும் பிறர் தருவதால் நமக்குக் கிட்டுவதில்லை.மலை மேலே மழை பொழிகிறது.ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.வெள்ளம் மரக்கட்டை ஒன்றையும் அடித்துக் கொண்டு வருகிறது.மரக்கட்டை எப்படி எல்லாம் வருகிறது?

அது ஆற்றின் வெள்ளத்தின் ஓட்டத்துக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் சுழல்களில் அகப்பட்ட இடத்து அதற்குள் சுளன்றும், மரங்கள் தட்டுப் படும் இடங்களில் அங்கே சற்று தரித்தும், மரநிழல் இருக்கும் இடத்தில் அதற்குக் கீழாகவும், வெய்யில் வருகின்ற போது அதற்குக் கீழாகவும், - இவ்வாறு ஆற்று வெள்ளத்தின் போக்குக்கேற்ப ஓடி இறுதியில் ஏரியை வந்து அடைகிறது.

ஆனால் இந்த மரக்கட்டை நான் அப்படி வந்தேன் இப்படி வந்தேன் என்று பெருமைப் படப் பேசலாமோ? அப்படி அது பேசினால் நாம் அதனை நகையாடத் தானே செய்வோம்? அது அவ்வாறு வந்தது அதனுடய செயல் அல்லவே! எவ்வாறு தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மரக்கட்டை வெள்ளத்தினுடய செயலை தன் செயல் என்று கருதுகிறதோ அவ்வாறே நாமும் நம்முடய கருமங்களை நம் செயலாக நினைத்து ஏமாறுகிறோம். எல்லாம் ஆற்று வெள்ளத்தினுடய செயலைப் போல கடவுளின் செயல் என நம்பி இருப்போருக்கு நல்செயல் தீச் செயல் என்ற பேதம் ஏது? பிறப்பும் மரணமும் இயற்கையானது என்ற தெளிந்த ஞானம் கைவந்து, எல்லாம் அவன் செயல் என்று ஆனந்தப் பெருக்கோடு அல்லவா வாழ்வர்?

அவர்களுக்கு அதன் பின் நல்வினை தீவினை என்ற பேதமோ நன்மை தீமை என்ற பலனோ இல்லை அல்லவா? அத்தகைய பக்குவம் கைவரப் பெற்றதால் அவர்கள் பெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை; சிறியோரைப் பார்த்து இகழ்வது அதனிலும் இல்லை!

ஆஹா ! என்ன ஒரு நிதானம்!பெருமிதப் பெருவாழ்வு! உலக பார்வை!சிந்தனைப் பெருக்கு!ஞான வாசனை!!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் தமிழ் புலவனுக்கு வந்த அந்த ஞானச் செருக்கைப் பார்த்தீர்களா? அது தமிழனின் வாழ்வின் ஆதாரமாக பற்றிப் பிடிக்க வல்லதல்லவா? தமிழின் இனிமைக்கும் பழைமைக்கும் இணக்கப்பாடான வாழ்வுக்கும் உரமான பாடல் அது.

புலம் பெயர்ந்து வந்து பலவருடங்களை இங்கு கழித்த பின் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். எங்கேனும் எப்போதேனும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆசிய நாட்டவள் என்றோ பெண் என்பதாலோ வயது நிமித்தமோ எங்கேனும் நான் மரியாதைக் குறைவாக வேலைத் தலத்திலோ அல்லது பொது இடத்திலோ அவுஸ்திரேலியர்களால் நடத்தப் பட்டிருக்கிறேனா என்று.

இல்லை என்பதே ஆணித்தரமான உண்மையான பதில்.

பல்கலாசார நாடான இங்கு மக்கள் மிக அன்னியோன்யமாகவும் நட்புறவோடும் அன்போடும் ஆதரவோடும் மகிழ்வோடும் வாழ்வதையே நான் கண்டிருக்கிறேன்.புன்னகைத்து வாழ்த்திப் போகும் போகும் வழிப்போக்கர்கள், மற்றவர் வாழ்வின் மூக்கை நுழைக்காத நாகரிகம், அடுத்தவர் பழக்க வழக்கங்கள் பண்பாடுகளை தம்முடையது போல கொண்டாடும் - தாமும் கலந்து கொண்டு மகிழும் பாங்கு,உதவி செய்யும் மனப்பாங்கு, எளிமையாக குடும்ப வாழ்வை நோக்கியதான அவர்கள் வாழ்வு முறை,மனிதம் நிறந்த மனங்கள்,விடுமுறை எடுத்துக் கொண்டு இயற்கையோடும் புதியனவற்றை அறிந்து மகிழும் உச்சபட்சமான அவர்கள் சந்தோஷம், குடும்பங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வான நேர்மை, பெண்னை சமனாக நடத்தும் அவர் தம் உயர்ந்த பண்பாடு.....இப்படி நிறைய உண்டு.

பெண் செய்கின்ற வேலை இது ஆண் செய்கின்ற வேலை இது என்ற பாகுபாடு அவர்களிடம் கிடையாது.குழந்தையின் தள்ளு வண்டிலை உருட்டிக் கொண்டு போகும் அப்பாக்கள், காதலிக்குமாகத் தேனீர் போட்டுக் கொண்டு வரும் காதலன்,ஆண் வீட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க பெண் உழைத்துக் கொண்டு வரும் அன்னியோன்னியமான குடும்பம்,உச்ச பட்சமாக அவர்களுக்குள் இருக்கும் உண்மை நேர்மை.... இப்படி நிறைய நாளாந்த வாழ்வோடு நாம் காணக்கிடைப்பவை.

அவர்களோடு வாழக் கிடைப்பது பெருமையாகவே இருக்கிறது.2000 ஆம் ஆண்டு சிட்னி மாநகரில் இடம் பெற்ற புதுவருட விழாக் கொண்டாட்டத்தின் போது வெனசா.அமொறொசி பாடிய பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.அன்று பாடியது போலவே மனதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் குரல்.

அதன் பின்னால் Back street boys பாடிய ஒரு பாடலையும் இணைக்கிறேன். இது தான் அவர்கள் வாழ்வு! எளிமையான அவர்கள் பண்பாடு!!



YouTube - Absolutely Everybody In Style Of Vanessa Amorosi Karaoke

YouTube - Backstreet Boys-As long as you love me*with lyrics*

Friday, October 22, 2010

HUCKLEBERRY FRIEND


கடந்த வாரம் தமிழ் இலக்கியம் தொடர்பாக எதையோ தேடிக்கொண்டு போன போது கண்ணுக்குக் கிட்டிய ஓரகராதி சூடாமணி நிகண்டு என்ற ஆரம்ப காலத் தமிழ் அகராதி. இவ்வகராதி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டதென்றும்;அது 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விருத்தப்பா வகையில் ஆக்கப்பட்டதென்றும்;இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கின்றது என்றும் விக்கிபீடியா குறிப்பிடுகின்றது.

அது விளக்கங்களோடு ஆறுமுக நாவலரினால் 1938ம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது.இன்று வழக்கொழிந்து போன பல தமிழ் சொற்கள் அதில் காணப்படுகின்றன.ஆணின் தலைமயிர், பெண்ணின் தலைமயிர், மேலுதடு,கீழுதடு என்பவற்றுக்கெல்லாம் தனியான தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன; அவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது தமிழின் தனித்துவத்துக்கும் அதன் நுட்பம், செறிவுத்தன்மை(richness)என்பவற்றுக்கு நல்லதொரு சான்றாகும்.அவ் அரிய பொக்கிஷத்தை முழுவதுமாக நூலகம்.நெற் ரில்(www.noolaham.net) மிகத் தெளிவாகவும் எளிதாகவும் தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.அவர்களுடய தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

அதனோடு சமாந்தரமான வகையில் தமிழுக்குக் காணப்படுகின்ற இன்னொரு இயல்பு 247 எழுத்துக்கள்.குறிலென்றும் நெடில் என்றும் ஒலிப்பவை சில.மெல்லினமாகவும் வல்லினமாகவும் இடையினமாகவும் ஒலித் தரமுள்ளவை மேலும் சில.ங,ழ, என்ற எழுத்துக்களோடு ஃ என்ற எழுத்தும் தனக்கென தனித்த இயல்புடையன. எழுத்தின் ஓசையும் எழுத்தின் அழகும் சேர்ந்து அது நினைத்தவாறெல்லாம் வளைந்தும் நெகிழ்ந்தும் கொடுக்கக் கூடியவாறு அமைந்திருப்பதால் சொற்களும் அதன் நெகிழ்வுத் தன்மையும் இன்னும் நுட்பமும் அழகும் வாய்ந்ததாக விளங்குகின்றது.

ஆனால் வெளி நாடுகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கின்ற மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.சிறப்பாக பேச வாசிக்கத் தெரிகின்ற மாணவர்கள்; தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொள்கின்ற மாணவர்கள் கூட எழுத்துப் பிழைகள் விட்டு எழுதுவதனால் பரீட்சைக்குத் தோற்றுவதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.

ழ,ள, ன,ண,ர,ற என்பனவற்றின் வேறுபாடுகளை விளங்கவைப்பதும் புரியவைப்பதும் அவற்றை தெளிவு படுத்துவதும் மிகுந்த சிரமமாக இருக்கின்றது.நம்மில் எத்தனை பேர் ழ,ள வேறுபாட்டை உணர்ந்து பேசுகிறோம்? நாம் கூட இரண்டையும் ஒன்று போலவே பேசிக் கொண்டு மாணவர்களை வேறுபாட்டோடு பேசவும் உணர்த்தவும் செய்தல் என்பது நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்யம்?

கடந்தவாரம் முழுக்க முழுக்க எனது சிந்தனை உலகு இதற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.எவ்வாறு மாணவர்களை இந்த சிக்கலுக்குள் இருந்து மீட்டெடுத்துக் கொண்டுவருவதென்பது குறித்த கேள்விகளுக்கு இங்கு வருகின்ற யாரேனும் விடை தெரிந்தால் கூறுங்கள். அது மிகுந்த உபயோகமாக இருக்கும்.

அதற்கு நான் கண்டு கொண்ட ஒரு சிறு விடயம் என்னவென்றால் அந்த எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதப் பயிற்சி கொடுப்பது தான். சொற்களையும் பொருளையும் விளங்கப் படுத்தி உச்சரிப்பின் இயல்பையும் தெளிவு படுத்த முனைந்து அதற்கான ஆங்கில அர்த்தத்தையும் கொடுத்து விட்டு அடுத்தவாரம் அதில் சொல்வதெழுதுதல் கொடுப்பது ஓரளவுக்கு பயனுடயதாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதன் ஒரு கட்டமாக சில சொற்களை வேலை இடைவேளையின் போது எழுதிக் கொண்டிருக்கும் போது என் நண்பன் றே(Ray) என்ன செய்கிறாய் என்ற படியே வந்தான்.விடயத்தைச் சொன்னேன். அவன், "Huckleberry Friend" என்றொரு அமெரிக்க ஆங்கில வார்த்தை இருக்கிறது தெரியுமா என்று கேட்டான். தெரியாதே அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.

உங்களுக்கு எப்போதேனும் ஒரு சடப்பொருள் அல்லது ஒரு அஃறிணை உயிர் நட்போடு இருந்திருக்கிறதா? நம்பிக்கையான ஒரு நட்பாக சிறு பிள்ளைகள் வைத்திருக்குமே கறடிப் பொம்மை அது மாதிரி, சில பாடல்களில் வருமே "வெண்முகிலே சொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு" என்பதில் வரும் வெண்முகில் மாதிரி,வீட்டுப் பிராணிகளோடு சிலர் தம் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வார்களே அது மாதிரி,அவர்களிடம் சொல்லி பிரச்சினை தீராது என்ற போதும் அதனிடம் சொல்வதில் ஓராறுதலைக் காண்பார்களே அது மாதிரியான ஒரு சினேகிதத்தை "Huckleberry Friend" என்று சொல்வார்களாம்.அதற்கு "Moon River" என்றொரு பாடலும் இருக்கிறது என்று கூறினான் றே.அந்தப் பாடலையும் இத்தோடு இணைத்திருக்கிறேன். அதில் அழுத்தி அப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

YouTube - Sarah Brightman - Moon River (Lyrics)

என்னுடய கேள்வி என்னவென்றால் அதற்கு இணையான தமிழ் சொல் இருக்கிறதா?

யாரேனும் இதற்கொரு தமிழ் வார்த்தை சொல்லி விட்டுப் போங்களேன்!

Wednesday, October 13, 2010

ஒரு ரசிகையின் பார்வையில் MELODIC RHYTHMS

கடந்த 9ம் திகதி மாலை ஆறு மணிக்கு நூலக மண்டபம் ஒன்றில் நடன விருந்தொன்றுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது.பிரபல நாட்டிய ஆசிரியையும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'பண்பாட்டுக் கோலங்கள்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து அளிப்பவருமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி அது.

கடந்த வருடமும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வந்து சென்ற அனுபவம் எனக்குத் தந்த பாடத்தின் பயனாக முதலில் கமறாவை தயார் நிலையில் வைத்துக் கொண்டேன்.கடந்த வருடத்தில் நடந்த செம்பு நடனம், தாம்பாளத்தில் நின்று செய்த நடனம்,மற்றும் இதுவரை நான் பார்த்திராத இந்திய மண்ணின் நடனங்களும் அவற்றில் இருந்த நேர்த்தியும் கமறாவுக்குள் அவற்றை அடக்கி விட முடியவில்லையே என்ற வருத்தமுமே அதற்குக் காரணம்.

வழக்கம் போல எளிமையான ஆடம்பரங்கள் அற்ற மேடை!அளவான மண்டபம்,மென்மையான ஒளியமைப்பு.எல்லோரும் பார்க்கத் தக்கதான இட அமைவு,மென்மையாக இசைத்துக் கொண்டிருந்த வாத்ய ஒலி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடித் திரிந்த பண்பாட்டு உடையணிந்த சிறிசுகள்,துப்பட்டாக்கள் சிறு பொருட்களால் ஏற்கனவே புக் செய்யப் பட்டிருக்கின்ற இருக்கைகள்,இந்திய சீன வெள்ளை முகங்கள் என மண்டபம் நிறைய ஒரு வித்தியாசக் கலவை!

அட, அப்பாவின் நண்பர் வந்திருக்கிறார். எங்களைப் போல 15 நிமிடங்கள் முன்னதாக.கடந்த வருடம் தனியாக வந்திருந்தவர் இம்முறை தன் மகள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.சற்றே நேரம் செல்லச் செல்ல இருக்கைகள் நிறைந்தன.அட, என் அக்காவும் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறாரே! நிச்சயம் முதல் வருட நிகழ்ச்சி பலரையும் பிடித்துக் கொண்டிருக்கிறதென்பது புரிந்தது.

நேரம் 6 மணியைக் கடந்து கொண்டிருந்தது.ஏன் பிந்துகின்றது என்ற வினா மனதுக்குள் எழுந்த போது ஒளியமைப்பைச் சரி பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் பட்டார். அட, இவ்வளவு நேரமும் நின்றவர் இப்ப தானா இதைச் சரி பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

6.15. மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.எல்லா நிகழ்ச்சிகளையும் படம் பிடிக்க நான் இருந்த இடம் தோதாக அமைய வில்லை.ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்த நடன நிகழ்ச்சிகளில் பரதம்,குச்சுப்புடி,பாம்பு நடனம்,பொலிவூட் நடனங்கள் என ஆசிரியரின் கைவண்ணம் சிறப்பாக அதில் மின்னியது.போன முறை இடம்பெற்ற ஆசிரியரின் கைவண்ணங்கள் இம்முறை இல்லாது புதிய வடிவில் நடனங்கள் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன.அது எனக்கு சற்று ஏமாற்றமாகவே போய் விட்டது.அந்த நடனங்களை - அந்த நடனப் பெண்மணிகளை எல்லாம் சேர்த்து கார்த்திகா இன்னொரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.இந்த இடத்தில் ஆசிரியருடய ஆழுமை பற்றிச் சற்றே சொல்லுதலும் பொருத்தம்.

சிலருக்கு கலையின் புனிதத் தன்மை மிகவும் முக்கியம். கலை கலையாக மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே படைக்கப் படுவது பிடிக்கும்.அதன் புனிதத்துவத்தில் ஓர் அழகு இருப்பதென்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், சிலருக்கு நடைமுறையோடு ஒட்டியவாறு மாற்றங்களோடு செல்வது பிடிக்கும்.ஒருவரிடம் இருக்கும் பார்வை, திறமை, சமூகத்தைப் பார்க்கும் கண்ணோட்டம்,சொல்ல விரும்புகின்ற செய்தி - இவை எல்லாவற்றையும் இந்த இரண்டாவது இயல்பு சிறப்பாகக் கொண்டு வரும்.இத்தகைய விரிவான பார்வை தான் புதிய சிந்தனைகளுக்கான ஆரம்ப ஊற்று.அந்த வகையில் கார்த்திகா இரண்டாம் ரகம்.புதிய கண்ணோட்டம், பார்வை,தெளிந்த சிந்தனை, அதனை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல்,கற்பனை வளம் ஆகியன கைவரப் பெற்றவர் கார்த்திகா.

அத்துடன் தனி இனம், மதம், கோட்பாடுகள் என்பவற்றுக்கப்பால் தனக்கென தனியான பார்வை, துணிவு, தன்னம்பிக்கை என்பனவும் கைவரப் பெற்றவர்.கற்பனையாற்றல்,அதனை வெளிப்படுத்தும் திறன், நேர்மையான சமூக நோக்கு என்பன கலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியதில் தனித்துவமான கம்பீரமான கலைஞியாக கார்த்திகா மிளிர்கிறார்.அவற்றை அவரது நிகழ்ச்சியில் நன்குணர முடிந்தமை இந் நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு.

நடன நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட்ட விதம், உடை நிறத் தெரிவு, அலங்காரம்,இடையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் இதனைப் புன்னகையோடு நடத்திய பெண்மணி, பிரதம விருந்தினர் உரை என மிக விறு விறுப்பாகவும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஊட்டும் படியாகவும் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது மிகச் சிறப்பு.

ஒரு மாணவி அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தில் வந்து ஆடிய நிகழ்ச்சியும் அது சொல்லி நின்ற தத்துவமும் வெளிப்படுத்திய செய்தியும் கலை என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதை இயல்பாகச் சொல்லி நின்றது.






























பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர். காந்தராஜாவும் பாரியாரும்.



நடன ஆசிரியர் கார்த்திகா. கணேசர் நன்றியுரை ஆற்றுகிறார்.



சில படங்களை எடுக்க முடியாமல் எனக்கு முன்னால் இருந்த 5,6 வயது மதிக்கத் தக்க சிறுவன் கையை உயர்த்தி மேடை நடனத்தை தானும் ஆடிய படி இருந்தான்.அது நிகழ்ச்சியின் வசீகரத்துக்கு எடுத்துக் காட்டு.

நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவு பெற்று வெளியேறும் போது என் அக்காள் சொன்னாள் 'நீ இந்த சீடீக்கள் விற்பனைக்கு வெளி வந்தால் மறக்காமல் எனக்கும் ஒன்று வாங்கித தா. வச்சு வச்சுப் பாக்கலாமடி' இது என் அக்காள்.அவர்களைத் தாண்டி வெளியே வந்த போது என் தந்தையின் நண்பரையும் மகள் குடும்பத்தினரையும் சந்தித்தேன்.அவரது மகளுக்கு 2,3, வயதுகளில் பிள்ளைகள்.இன்று என் அப்பாவின் வற்புறுத்தலுக்காகவே வந்தேன். இந்த ரீச்சர் எங்க இருக்கிறா? அங்க தானோ வகுப்புகள் எடுக்கிறா? இன்னும் 2 வருஷம் போக அவவிட்ட என்ர மகளையும் விட வேணும்.'


நல்ல நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தேவை இல்லை.அது தானாகவே எல்லோரையும் வசீகரிக்கும்.விளம்பரங்கள் எதுவுமற்று நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்த சனக்கூட்டம் அதற்கு ஒரு நல்ல சான்று.

மூன்று மணி நேரங்கள் - மிக சிறப்பாக அளிக்கப்பட்ட விருந்து - நேரத்துக்குக் கிட்டிய மிக உயர் சன்மானம் - அது கார்த்திகாவும் மாணவிகளும் எங்களுக்குத் தந்த மறக்க முடியாத பரிசு!

அடுத்த வருடமும் போக வேண்டும்.

Wednesday, October 6, 2010

போவோமா ஊர்கோலம்!

கடந்த வார இறுதி (2,3,4 ஒக்ரோபர்)எங்களுக்கு நீண்ட வார இறுதி. திங்கள் கிழமையும் சேர்த்து விடுமுறை.சில வேளைகளில் ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்ய வேண்டி வருகின்ற எனக்கு அபூர்வமாக அந்த நாளும் வேலை செய்ய வேண்டி வரவில்லை.

அவுஸ்திரேலியாவில் வசந்தகாலம். வருடத்திலேயே மிக அருமையான கால நிலையைக் கொண்ட நேரம் இது.என்ன செய்யலாம் என்று யோசித்த படி வானிலை அறிக்கையைப் பார்த்தால் முழு வாரமும் மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என அது சொல்லியது.அதனால், வீட்டில் இருந்த படி கொமன்வெல்த் விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்று ஒரு சாராரும் வீட்டினை; வீட்டுத் தோட்டத்தினை மீள் ஒழுங்கு படுத்தலாம் என்று இன்னொரு சாராரும் சொன்ன போதும் பலமான ஆதரவு கன்பராவில் இருக்கும் மலர் கண்காட்சியைப் பார்ப்பதற்கு இருந்ததால் இறுதியில் அங்கு போவதெனத் தீர்மானம் ஆயிற்று.

அக்கா குடும்பத்தினரும் நாமுமாக இரண்டு கார்களில் புறப்பட ஆயத்தமான போது முதன் முதல் நான் எடுத்து வைத்தது என் கமறாவைத் தான். வேறென்ன உங்களையும் அங்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் அந்த ஏற்பாடு.(அதற்காக நான் ஒன்றும் சிறந்த படப்பிடிப்பாயினி என்று நினைத்து விடாதீர்கள். இப்படித்தான் நான் விடயங்களைக் கற்றுக் கொள்வது வழக்கம்.:)

கன்பரா சிட்னியில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள்.110 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தால் சுமார் 3 மணி நேரத்தில் கன்பராவைச் சென்றடைந்து விடலாம்.(இளைப்பாறிச் செல்லும் நேரங்கள் உட்பட)ஒரே நாளில் திரும்புகின்ற என்ணம் இருந்ததாலும் அன்று நமக்கு நேரம் மாறியதாலும் பழைய நேரம் 7.30க்கும் புதிய நேரம் 8.30க்கும் பயணம் ஆரம்பமாயிற்று.

புறப்பட்ட நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. சுதந்திரமாகப் பயணிக்க அது நல்ல வாய்ப்பாயிற்று.சிட்னியில் இருந்து பயணிக்கின்ற பாதையின் இரு மருங்கிலும் பார்ப்பதற்கென்று அதிகம் எதுவுமில்லை. சிட்னி நகர் புறத்தைத் தாண்டிப் போனால் வரும் அகன்ற பெரிய வெளிகளில் குதிரைகளும் செம்மறி ஆடுகளும் மேய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். மற்றும் படி பார்ப்பதற்கு அதிகம் எதுவுமில்லை.







மேலே உள்ள படங்களும் அவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கும். முதலாவது புகைப்படம் நாம் ஓய்வுக்காக நின்ற ஓரிடத்திலிருந்து எடுத்தது.



மேலே உள்ள புகைப்படம் நாம் மலர்க் கண்காட்சிப் பிரதேசத்துக்குள் பிரவேசித்த உடன் பக்கவாட்டாகக் காணப்பட்ட பழங்காலத்து பியானோ என்று அறிந்தோம். இரண்டு டொலர்களைப் போட்டால் அது அருமையாக இசைக்கிறது.



மேலே உள்ள படம் பிள்ளைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த விளையாட்டுத் திடல்.( பாடசாலை விடுமுறை இப்போது)குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் அங்கு குழந்தைகளாக மாறியிருந்ததைக் காண முடிந்தது.

முகப்பின் இரு மருங்கிலும் பியானோவும் விளையாட்டுத் திடலும் அமைந்திருக்க கண்ணுக்கு எட்டிய பரப்பு வரை பூக்களின் காடு!அவற்ரைப் பார்த்த படி வாருங்கள்.























இடையிலே ஒரு புறத்தில் சேர்க்கேஸ் நடந்து கொண்டிருந்தது.பூக்களைப் பார்ப்பதில் அடங்கா ஆவல் இருந்ததால் இங்கு அதிகம் மினைக்கெட வில்லை.ஆனால் இந்த மனிதன் பாத்துக் கொண்டிருக்கும் சிறார்களையும் பங்கு பெற வைத்து அவர்களுக்கு மிட்டாய்கள் சிறு பரிசுப் பொருட்களும் கொடுத்துக் கொண்டிருந்தது பிள்ளைகளை ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது.













கீழே இருக்கும் படம் இடையில் இருந்த மலர்க் கண்காட்சியில் எடுத்தது. உள்வீட்டு அலங்காரத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப் பட்ட மலர்களால் பலவித சாடிகளில் அலங்காரமாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. சீனர்கள் இதில் மிக வல்லவர்கள். நேர்த்தியும் கலை உணர்வுமாக அவர்களால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த பல சாடிப் பூக்களை எப்போதும் பலர் மொய்த்துக் கொண்டிருந்ததால் தனியாக அதனை எடுக்க முடியாது போய் விட்டது.





கீழே இருக்கும் படம் அங்கு இருந்த 'திருவிழாக் கடையில்'எடுத்தது.பல கலைப் பொருட்கள் தொப்பிகள்,அலங்காரப் பொருட்கள்,மாலைகள்,குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், தேநீர் சாலைகள்,என்று கடைகளுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் விலை தான் சற்றே அதிகம்.புன்னகையோடு நிற்கின்ற விற்பனைப் பெண்கள் தம் அழகுப் புன்னகைக்கும் சேர்த்தே விலை வைப்பார்கள் போலும். ஆனால் சும்மா சொல்லக் கூடாது எல்லாம் அழகான பொருட்கள் தான்!



இனித் திரும்புகின்ற நேரம் ஆகி விட்டது.சிட்னி நோக்கி புறப்பட ஆரம்பித்தோம்.

இந்த இடத்தில் ஒரு விடயம் அவசியம் சொல்ல வேண்டும். பல நூறு மைல் தூரங்களை இணைக்கும் வீதிகள் மிகுந்த நேர்த்தியாக இருப்பதும் இடையிடையே காணப்படும் இளைப்பாறும் இடங்கள், சிரம பரிகாரம் செய்யும் இடங்கள், அவை எல்லாம் அவற்றுக்குரிய சுத்தத்தோடும் தண்ணீர், பேப்பர், கைகளை உலர்த்தும் கருவிகள், கண்ணாடிகள் இத்யாதிகள் சகிதம் சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. அவசர தொலைபேசித் தொடர்புகளுக்கான வசதிகளும் ஆங்காங்கே செய்யப் பட்டிருக்கின்றன.இதற்காக அரசாங்கத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

கீழே இருக்கின்ற படம் திரும்பி வரும் வழியில் நின்ற ஓரிடம்.பிரமாண்டமும் தத்ரூபமுமாக அமைக்கப் பட்டிருக்கும் செம்மறி ஆடு இது.இதன் நான்கு கால்களுக்கும் கீழே கடை இருக்கின்றது.இளைப்பாறிச் செல்ல உகந்த இடம் இது. நமக்கான தேநீர்சாலையும் வாகனத்துக்கான தேநீர்சாலையும்(பெற்றோல் நிரப்பும் நிலையம்)இங்கு இருக்கின்றது.





சிட்னிக்குப் போகும் பாதை.(எங்கே முடியும் இப்பாதை? தெரியவில்லை)



கீழே உள்ள இரு படங்களும் ச்சும்மா:)

காரோட்டும் வளை கரம்!

110ல் போகவேண்டிய இடத்தில் கொஞ்சம் கோடினேஷன் பிழைச்சுப் போச்சு!ஒருகால் ஆக்சிலேட்டரில் ஒரு கை ஸ்ரியறிங் இல் மறுகையில் கமறா இருந்ததால் 110 கிலோ மீற்றர் வேகம் 100 ஆகிவிட்டது.



இந்தப் படத்தில் சரியாகிவிட்டது!:)



ஊர்வலம் பிடிச்சிருக்கா?

(குறிப்பு: கடந்த புதன் கிழமை எழுத ஆரம்பித்த பதிவை இன்று வெள்ளிக் கிழமை தான் பிரசுரிக்க முடிந்தது.புதன் கிழமையே வந்து பார்த்துப் போனவர்கள் மன்னிக்க!)