Wednesday, January 21, 2009

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்..........

குழந்தைகளைப் பற்றி பதிவு போட்டபின் அவர்களது உலகத்தினை விட்டு வருதல் மிகக் கடினமாக இருக்கிறது.அவர்கள் பற்றிய நினைவுகளொன்று மாறி ஒன்று வந்து கொண்டே இருக்கிறன.(நினைவில் நிற்க வேண்டிய பல விடயங்கள் நினைவில் நிற்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய இன்னோரு விடயம்)பெற்றோர் பெரிதுவந்த சில விடயங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அவர்களது உலகம் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கிறது என்பது என்னை இன்னும் ஆச்சரியப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது!

ஒருமுறை பிறந்த நாள் ஒன்று கூடலின் போது அம்மம்மா பேத்தியை மடியில் வைத்திருந்தார்.பேத்தி, அம்மம்மாவின் கழுத்து மாலையை மிகவும் விருப்போடு விளையாடிக்கொண்டிருந்தார்.அம்மம்மா பேத்தியிடம், "நான் இறந்த பின் இந்த முத்து மாலையை நீ எடுத்துக் கொள்" என்றார். உடனே பேத்தி கேட்டாள்,"நீங்கள் எப்ப அம்மம்மா இறப்பீங்கள்"

ஒரு மலேசியத் தாயார், எனது காரியாலயத் தோழி,எப்போதும் அவருக்கு அவரது 2வது மகனை இட்டு கவலை.மூத்த மகன் பாடசாலைக் கல்வியில் மிகவும் கெட்டிக்காரன்.ஆனால் 2 வது மகனுக்கு பாடசாலைக் கல்வியில் சற்றேனும் நாட்டமில்லை.ஆனால் தாயாருக்கு உதவி செய்வதிலும்,நண்பர்களோடும் அண்ணனோடும் பொருட்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விளையாட்டுக்களிலும் மிகுந்த பெருந்தன்மை நடந்து கொள்வானாம்.மகன் கல்வியில் நாட்டமில்லாது இருப்பதை இட்டு கவலை கொண்ட தாயார்,ஒரு நாள் " மகனே நீ வளர்ந்து என்னவாக வரப்போகிறாய்" என்று கேட்டார்.உடனே மகன் தயங்காது பதிலளித்தான். "அம்மா, நான் குப்பை லொறி றைவராக வரப்போகிறேன்" (இங்குள்ள குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறிகள் விசித்திரத் தோற்றம் உள்ளதாக இருக்கும்)

இதனை எழுதும் போது என் வட இந்தியத் தோழி தன் பிள்ளைகளைப் பற்றிக் கூறியதை கூறாமல் இருக்க முடியாது. அவரது 3 வயது மகள் ஒரு முறை விழுந்து விட்டாள். உடனே தாயார் தூக்கி நோ பட்ட இடத்தை வருடிக் கொஞ்சி விட்டு "பிள்ளைக்கு இனி மாறி விடும்" என்று சொன்னவுடன் அவர் அழுகையை நிறுத்திக் கொண்டாராம்.இது நடந்து சில நாட்களின் பின்னர் அவரின் கணவரின் தம்பி மோட்டார் சயிக்கிளால் விழுந்து காயப்பட்டு தம் வீட்டுக்கு வந்தாராம்.மகள் தாயாரின் சட்டையை இழுத்துக் கொண்டு வந்து அவரின் முன் நிறுத்தி விட்டு சொன்னாளாம்." அவரது காயப்பட்ட இடங்களைக் கொஞ்சுங்கள் அம்மா.அவருக்கு மாறிவிடும்"

அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒரு மேல் தளத் தொடர் மாடிக் குடியிருப்பில்
வாழ்ந்து வந்தனராம்.அதன் பலகணி வழியாகப் பார்த்தால் பூந்தோட்டங்களால் நிறைந்த இடு காடு தெரியுமாம்.பலர் வருவதும் போவதும் இடு காட்டில் தினசரி நடக்கும். அக்குழந்தை மனதில் அது பூங்கா என்று தோன்றிற்றோ என்னவோ ஒரு நாள் கேட்டானாம்,"நாங்கள் எப்பம்மா அங்கு போவது?"

இந்தியாவில் அவர்கள் இருந்த போது அவரது அக்காவின் குடும்பத்தினர்- மிகவும் வசதியாக இருந்தார்கள்.தந்தை இரானுவத்தில் பெரிய பதவி வகித்தவர்.விடுமுறை நாள் ஒன்றில் வீட்டுக்கு வந்திருந்தாராம்.இரவு நேரம். தாயார் சமையல் அறையில் சப்பாத்தி தட்டிக் கொண்டிருந்தார். அருகில் உதவி செய்யும் பையன் மா உருண்டைகளைச் செய்து சப்பாத்தி செய்ய உதவிக் கொண்டு இருந்தானாம்.ரீ.வி. பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை அழைத்து "மகனே, நீ என்னவாக வர விரும்புகிறாய்" என்று கேட்டார். அதற்கு மகன்,"நான் சப்பாத்தி உருண்டைகளை அந்தப் பையனைப்போல் செய்து கொண்டிருக்கப் போகிறேன்"என்று பதிலளித்தான்.

இதனை எழுதும் போது,மங்கையர் மலர் என்று நினைக்கிறேன், சஞ்சிகையில் பார்த்த சில விடயங்களும் ஞாபகத்தில் வருகின்றன.மகள், ஒரு நாள் காலை கோலம் போடும் போது வாசல் படியில் வந்தமர்ந்தாளாம். படியில் இருக்காதே, வாசல் படியில் சாமி இருக்கிறது என்று சொல்ல, மகள் சொன்னாள்,"நான் சாமியின் மடியில் தானம்மா உட்கார்ந்திருக்கின்றேன்".எவ்வளவு அழகான பதில் இல்லையா?

8 comments:

  1. குழந்தைகளப் பற்றி நிறைய ஆதங்கத்துடன் எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
    நேரம் இருந்தால் இந்தப் பதிவில் இருக்கும் பேட்டியை முழுதாக கேளுங்கள்.

    http://akathy.blogspot.com/2008/12/blog-post_20.html

    குழந்தை வளர்ப்பை பற்றி ஒரு உளவியல் நிபுணரின் பேட்டி

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் காரூரன்.நான் அந்தப் பேட்டியைக் கேட்கிறேன்.

    குழந்தைகளையும் வாய் பேசாப் பிராணிகளையும் யாரும் தவறாகக் கையாழும் போது என் வசத்தில் என்னால் இருக்க முடிவதில்லை காரூரன்.

    உங்கள் "அறிவு முகம்" பக்கம் வந்தேன்.நடைமுறை வாழ்வோடு சேர்ந்த பல நல்ல கருத்துக்களைத் தந்திருக்கிறீர்கள்.எனக்கு ஆர்வமுள்ள விடயங்களாகவும் அவை இருந்தன.பின்னூட்டம் இட முயற்சி செய்தேன். ஏனோ முடியவில்லை.

    கனடிய மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை அவற்றில் இருக்கின்ற நல்ல அம்சங்கள் இவற்றையும் உங்கள் அறிவு முகத்தில் காண விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. குழந்தையாகவே மாறிவிட்டீர்கள்; சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன உங்களது வரிகள். ரசிக்கவும் நேசிக்கவும் நல்ல மனசு வேண்டும்; யசோதாவுக்கு கடவுள் நிறையவே தந்துவிட்டார் போலும்

    ReplyDelete
  4. அவர்களைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம் பூபதி.

    யாரோ ஒரு பேச்சாளர் சொன்ன வரி ஒன்று."ஒரு சிறு குழந்தையின் முன்னால் கிலுகிலுப்பையைக் காட்டினால் அது சிரிக்கிறது. அதையே ஒரு தாத்தாவின் முன்னால் காட்டிப் பாருங்கள்.அவருக்கு என்னமாய்க் கோபம் வருகிறது! எப்படி இருந்த நாம் எப்படி ஆகி விட்டோம் பார்த்தீர்களா" என்று கேட்டார்.

    எப்போது நாம் இவ்வாறு உரு மாறுகிறோம் என்பது தான் தெரியவில்லை.பாடசாலையில் கால் வைக்கும் போதே அழுத்தங்களும் ஆரம்பித்து விடுகிறதோ?

    ReplyDelete
  5. அருமையான பதிவு! உங்கள் எழுத்துக்கள் ஆழமானதாகவும் எளிமையாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  6. உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.உங்கள் வரவால் மிகவும் மகிழ்வெய்துகிறேன்.

    தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாருங்கள்.வளர மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  7. /ஒரு நாள் காலை கோலம் போடும் போது வாசல் படியில் வந்தமர்ந்தாளாம். படியில் இருக்காதே, வாசல் படியில் சாமி இருக்கிறது என்று சொல்ல, மகள் சொன்னாள்,"நான் சாமியின் மடியில் தானம்மா உட்கார்ந்திருக்கின்றேன்".எவ்வளவு அழகான பதில் இல்லையா? /

    அருமை

    ReplyDelete
  8. உண்மை தான் திகள்மிளிர்.

    அவர்களது உலகு கண்ணாடி போல.ஒரு நாள், மாலை சிற்றுண்டி அருந்த ஆயத்தமான நேரம் நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்களாம்.அதனால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களோடு அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்களாம்.சின்ன வாண்டு ஒன்று கோபமாக இருந்தாளாம்.வந்த நண்பர் ஒருவர் "ஏனம்மா கோபமாக இருக்கிறாய்" என்று கேட்க "நீங்கள் விரைவாகப் போனால் தானே நாங்கள் சிற்றுண்டி சாப்பிடலாம்" என்றாளாம்.

    இப்படி நிறையக் கதைகள் உண்டு திகள் மிளிர்.

    உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete